தேசிய செய்திகள்

கேரள மக்களின் துயரத்தில் பங்கெடுப்போம்!

கேரளாவில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஒட்டுமொத்த கேரளாவும் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய இருப்பிடங்களை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.

50க்கும் அதிகமானோர் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பலியாகியுள்ளனர். லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கேரளாவில் கனமழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்களில் இரவு, பகல் ஓய்வில்லாமல் எஸ்.டி.பி.ஐ. கட்சி உருவாக்கிய பேரிடர் மீட்பு குழு, ஆயிரக்கணக்கான செயல்வீரர்களுடன் மும்முரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை மழை வெள்ளத்தில் எஸ்.டி.பி.ஐ. மேற்கொண்ட சேவையினைப் போல் மீட்பு நடவடிக்கை, மருத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேரிடர் மீட்பு குழு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு தன்னலம் கருதாமல் உதவிகரமாக திகழ்கின்றார்கள்.

ஒருபுறம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேரிடர் மீட்புக்குழுவினர் வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்து தேவையான உணவு, உடைகளை வழங்கி நிவாரணப் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டபோது, மறுபுறம் கனமழையால் பாதிக்காத பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவு, உடை மற்றும் இதர நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள்.

கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்ட வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், நிலம்பூர், ஆலுவா, இடுக்கி, ஆலப்புழா, குட்டநாடு ஆகிய பகுதிகளில் கர்ம சிரத்தையாக எஸ்.டி.பி.ஐ. செயல்வீரர்கள் துடிப்போடு பணியாற்றுகின்றனர்.

மீட்பு நடவடிக்கை, பேரிடர் எச்சரிக்கை, ஆறுதல் அளிக்கும் குழுக்கள், சேவைகள், தேவையான பொருட்களை சேகரித்தல், விநியோகம், சட்டரீதியான உதவிகள் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்கள்.

நிலம்பூரில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து எஸ்.டி.பி.ஐயின் செயல்வீரர்களும் ஈடுபட்டனர். எல்லா மாவட்டங்களிலிருந்தும் தேவையான பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதிலும் எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

கேரள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானித்து, எதிர்வரும் ஐந்து நாட்கள் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் அதற்காக களமிறங்க முடிவு செய்துள்ளது. மேலும், ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை வழங்கவும் தமிழ் மாநில செயற்குழுத் தீர்மானித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மனித நேயத்தோடு பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய கேரள சொந்தங்களுக்கு பொருளாதார உதவியும், நிவாரணப் பொருட்களும் தந்து உதவிடுமாறு தமிழக மக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

வி.எம்.எஸ். முகமது முபாரக்
மாநில தலைவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி
தமிழ்நாடு.

Related posts

ஃபாலஸ்தீனியர்களுக்காக ஜெருசலத்தை மீட்டெடுப்போம்; எஸ்.டி.பி.ஐ

admin

தலித் தலைவர் ஆஸாத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

admin

சிரியாவே போரை நிறுத்து! டெல்லியில் ஐ.நா.அலுவலகம் முற்றுகை போராட்டம்

admin