மாநில செய்திகள்

ரஃபேல் முறைகேடு – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (செப்.24) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அபுபக்கர் சித்திக், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, முகமது பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;

ஏழு தமிழர்கள் உள்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்:

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஏழு தமிழர்களையும் விடுவிக்க தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறி தமிழக ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவையால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது. ஆகவே, தமிழக ஆளுநர் விரைவாக ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒப்புதலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் 10 ஆண்டு ஆயுள் தண்டனை கழித்த முஸ்லிம் சிறைவாசிகளும் நீண்டநாள் சிறைவாசம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முந்தய ஆண்டுகளில் அவர்களின் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசால் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திலும் ஆளுநரின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது.

குற்றங்களை பார்த்து விடுதலை செய்வதல்ல, குற்றவாளியை பார்த்து விடுதலை செய்வதுதான் மன்னிப்பு. ஆகவே, நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும், ஜாதி, மதம் பாராமல் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும். சிறைவாசிகளை கருணையுடன் பரிசீலித்து அவர்களின் நன்னடத்தை அடிப்படையில், அவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

எச்.ராஜாவை தே.பா.சட்டத்தில் கைது செய்ய வேண்டும்:

முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்தார் என்று கூறி திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்துள்ள தமிழக காவல்துறை, அதைவிட மிக மோசமாக உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சனம் செய்ததோடு பொது அமைதிக்கு பங்கம் விளவிக்கும் வகையில் பேசிய, எந்த ஒரு மக்கள் பிரதிநி பதவியையும் வகிக்காத பாஜகவின் எச்.ராஜாவை கைது செய்யாமல் சுதந்திரமாக விட்டுள்ளது. எச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டதாக கூறப்படும் அதேவேளையில், அவர் செல்லும் இடமெல்லாம் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இது தமிழக அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்துக்கிறது.

கைது செய்து சிறையிலடைக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளிக்கு 100 போலீஸ் பாதுகாப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையிலும் மவுனம் காக்கும் தமிழக அரசு, அவரை கைது செய்ய எது தடையாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர் கைது செய்யப்பட முடியாத அளவிற்கான நபர் அல்ல என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு முன்பும் எச்.ராஜா மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், பெரியார் குறித்து அவதூறாகவும் பேசி தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தது. மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பேசியது என ஏராளமான வழக்குகள் எச்.ராஜா மீது உள்ளது. அதேபோல பெண்களை அவதூறாக, தரக்குறைவாக பேசிய பாஜகவின் எஸ்.வி.சேகர் மீதும் வழக்குகள் உள்ளன. ஆனால், கருணாஸ் மீது காட்டிய சட்ட நடைமுறையின் வேகத்தை எச்.ராஜா மீதோ, எஸ்.வி.சேகர் மீதோ காட்டாதது பல சந்தேங்களை தமிழக அரசு மீது ஏற்படுத்துகிறது. ஆகவே தமிழக காவல்துறையை மிக மோசமாகவும், ஆண்மையற்றவர்கள் என்றும் பேசிய எச்.ராஜாவின் கூற்றை பொய்யாக்க வேண்டும் என்றால் எச்.ராஜாவை கைது செய்வதை தவிர தமிழக காவல்துறைக்கு வேறு வழியில்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு:

அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் “அரசியலாய் அணிதிரள்வோம், அதிகாரத்தை வென்றெடுப்போம்!” என்ற முழக்கத்துடன் எதிர்வரும் அக்.21 அன்று திருச்சியில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் ‘ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு’ நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்கான அனைத்துப் பணிகளும் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள், தேசிய அளவிலான அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுக்க விருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் திரண்டெழுந்து, ஆதரவளித்து மாநாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ரஃபேல் முறைகேடு – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்:

ரஃபேல் முறைகேடு என்பது பாதுகாப்புத் துறையில் இந்தியா சந்தித்திராத மிக மோசமான முறைகேடு. இந்திய சுதந்திர வரலாற்றின் முதல் ஊழல் வி.கே.கிருஷ்ண மேனன் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்தது. அதன் பின்னர் போஃபர்ஸ் ஊழல் முறைகேடும், முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்காக வாங்கப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரும் ஊழல் முறைகேடு ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு அமைந்துள்ளது. இது குறித்து வெளிப்படையான விசாரணை செய்யப்பட வேண்டும்.

ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பெறுவதற்காக முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதிக விலைக்கு ரஃபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய போது அதனை மறுத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், ஒப்பந்த ரகசியத்தை வெளியிடக்கூடாது என்று கூறி முறைகேட்டை திரையிட்டு மறைத்தார். அதேபோல பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று தனிப்பட்ட முறையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பெறவே இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளார் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த பாதுகாப்புதுறை அமைச்சகம் ரிலையன்ஸ் நிறுவனத்தை விமானத்தை தயாரிக்கும் தஸால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்ததாகவும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் தெரிவித்தது. ஆனால், ரஃபேல் விமான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே பிரான்ஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து, ரஃபேல் முறைகேட்டை மறைக்கும் மோடி அரசின் முகத்திரையை கிழித்துள்ளார்.

ஆகவே, ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

முத்தலாக் – அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்:

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுக்கு எதிராக தனது நடவடிக்கையைக் காட்டும் வகையில், முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மோடி அரசின் இந்த தீவிர நடவடிக்கை முஸ்லிம் பெண்களின் மீதுள்ள உண்மையான அக்கறையால் அல்ல, மாறாக இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது.

முஸ்லிம்களின் தனிநபர் சிவில் உரிமைச் சட்டத்தை கிரிமினல் குற்றமாக்கும் வகையில், முஸ்லிம் சமூக தலைவர்களின் ஒப்புதலைப் பெறாமல், எந்த விவாதமும் இல்லாமல் ஒரேநாளில் மக்களவையில் நிறைவேற்றிவிட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றாமலும், பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமலும் குறுக்கு வழியில் அவசரச்சட்டம் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

இது நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள ரஃபேல் ஊழல் தொடர்பான விவாதங்களை, உண்மைகளை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்காக அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட மோசடி நடவடிக்கையாகும். இதன் மூலம் நாட்டில் ஒரு கொந்தளிப்பை உருவாக்குவதற்கான நாடகத்தை மோடி அரசாங்கம் அரங்கேற்றம் செய்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதுபோன்ற கையை முறுக்கும் அடக்குமுறை நடவடிக்கை மூலம் மோடி அரசு முஸ்லிம்களை அடக்க முயற்சி செய்து அவர்களைப் பணிந்து போகச் செய்ய முயல்கிறது.

முத்தலாக் அல்லது உடனடி தலாக் முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த முஸ்லிம் இயக்கங்களும் அல்லது சமுதாய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அதை சிறையில் அடைக்கக்கூடிய பிணையில் வெளிவர முடியாத குற்றச் செயலாக ஆக்குவது பொருத்தமற்ற ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் இது முத்தலாக்கால பாதிக்கப்பட்ட பெண்ணின் சூழ்நிலையை மென்மேலும் மோசமாக்கவே செய்யும்.
மோடி அரசின் இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் ஜனநாயகப் பூர்வமானது அல்ல. இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள சிவில் உரிமை சட்டத்தில் அரசாங்கம் மூக்கை நுழைப்பது சரியல்ல. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களை நடத்திய பின்னரும் மக்களின் எதிர்ப்பை புறக்கணித்து இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறதென்றால், இந்த அரசு மக்களின் எந்த குரலையும் செவிசாய்க்கக் கூடிய அரசாக தெரியவில்லை. எனவே, முஸ்லிம் சமூக மக்களின் எதிர்ப்பை கவனத்தில் கொண்டு இந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மீது பாஜகவினர் அராஜக தாக்குதல் – கண்டிக்கத்தக்கது!

மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் இணைந்து மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். மேலும், மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் மோடி அரசின் செயல்பாட்டை விமர்சிப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

காரைக்குடி, விருதுநகரில் மாணவி நந்தினியின் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பாஜகவினர் மிகமோசமான ஆபாச வார்த்தைகளுடன் மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இரு சக்கரவாகனத்தில் சென்ற அவர்களை மானாமதுரை அருகே பாஜகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர் மீதும் அவருடைய தந்தை மீதும் தாக்குதலை நடத்திச் சென்றுள்ளனர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாத காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்திய மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் பாஜகவினர் மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்து வருகின்றது. இந்த போக்கை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களின் மிகப்பெரும் எதிர்ப்பை இந்த அரசு சந்திக்க நேரிடும்.

மத்தியில் மோடி அரசு அமைந்த நாள் முதல் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம்போராடுவதற்கும், கருத்து சொல்வதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை அளித்துள்ளது. ஆனால், அந்த உரிமையை பாஜக தடுத்து வருகின்றது. பாஜக அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள், எழுதுபவர்கள் என ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்திரிக்க பாஜகவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களை எதிர்த்து தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் தாக்கப்படுவார்கள் அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்கிற போக்கு மிக ஆபத்தானது. இத்தகைய போக்கினை கொண்டுள்ள பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

admin

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin

உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. வழக்கு – மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

admin