• முகப்பு
  • மகளிர் அணி செய்திகள்
  • ஆசிஃபாவிற்கு நீதி வழங்கு! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு! – நீதிகோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மகளிர் அணி செய்திகள்

ஆசிஃபாவிற்கு நீதி வழங்கு! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு! – நீதிகோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கோரியும், சட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் இந்து ஏக்தா மஞ்ச் மற்றும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஏப்.15) நடைபெற்றது.

விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவி நஜ்மா பேகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன், காஞ்சிபுரம் மாவட்ட விம் செயலாளர் தஸ்லிமா, வடசென்னை மாவட்ட தலைவி அக்தரி, திருவள்ளூர் மாவட்ட தலைவி வழக்கறிஞர்.ஹாலிதா, எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், நேஷனல் விமன் ஃப்ரண்டின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெரீனா பேகம், இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில், PUCL தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டதில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி; பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைகளே தெளிவுபடுத்துகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆளும் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில்தான் அதிகமாக நடக்கின்றன எனத் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், நான்காண்டு கால ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.

உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை பாஜக குண்டர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை கைது செய்யாமல் முதல்வர் ஆதித்யநாத் பாதுகாத்து வந்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கஷ்மீர் சிறுமி ஆசிஃபா விவகாரத்தில் சட்ட நடவடிக்கைக்கு கூட பாஜக அமைச்சர்களாலும், இந்து ஏக்தா மஞ்ச போன்ற இந்துத்துவா அமைப்புகளாலும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இந்த போக்கு நாட்டிற்கு பெரும் அபாயத்தை உண்டு பண்ணும்.

உ.பி.யில் யோகி தலைமையிலான 10 மாத பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் வழக்குகள் 99 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பில் பாஜக அரசின் லட்சணத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான வன்முறையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. முன்னர் பசு குண்டர்கள் விவகாரத்தில் காட்டிய மவுனத்தை தற்போது பெண் குழந்தைகள் விவகாரத்தில் மோடி கடைபிடித்து வருகிறார். ‘பேடி பச்சாவோ’ பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது மோடி அரசின் பாசாங்கு நாடகம் என்பதை நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் இங்குள்ள முக்கியப் பிரச்சினை. காவல்துறை உள்ளிட்ட குற்றத் தடுப்பு அமைப்புகளை மத்திய அரசு முழுவீச்சிலும், சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Related posts

வடக்குமாங்குடியில் விம் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி

admin

கூத்தாநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

admin

விமன் இந்தியா மூவ்மெண்டின் (விம்) புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு முத்தலாக் தடை அவசரச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது! – புதிய தலைவர் கடும் கண்டனம்

admin