• முகப்பு
  • மகளிர் அணி செய்திகள்
  • விமன் இந்தியா மூவ்மெண்டின் (விம்) புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு முத்தலாக் தடை அவசரச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது! – புதிய தலைவர் கடும் கண்டனம்
மகளிர் அணி செய்திகள்

விமன் இந்தியா மூவ்மெண்டின் (விம்) புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு முத்தலாக் தடை அவசரச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது! – புதிய தலைவர் கடும் கண்டனம்

சமூகம் மற்றும் அரசியல் ரீதியில் தேசிய நீரோட்டத்தில் பெண்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்ட பெண்களுக்கான தேசிய அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் (விம்) ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, பெங்களூரில் பிரம்மாண்ட தேசிய மாநாடு செப்டம்பர் 23 அன்று நடைபெற்றது.

கடந்த 3 ஆண்டுகளில் விம் அமைப்பு சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்ற செயல் திட்டங்கள் குறித்த அறிக்கை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விரிவான விவாதம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஜெய்பூரை சேர்ந்த மெஹருன்னிஷா கான் புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாஸ்மின் இஸ்லாம் பொதுச்செயலாளராகவும், குஜராத்தை சேர்ந்த கும்கும் பென் தேசிய துணைத் தலைவராகவும், கேரளாவை சேர்ந்த ரெய்ஹானாத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தரனா சர்ஃபுதீன் ஆகியோர் தேசிய செயலாளராகவும், கர்நாடகாவை சேர்ந்த ஆயிஷா பஜ்பே பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மாநாட்டில் உரைநிகழ்த்திய விம் அமைப்பின் புதிய தலைவர் மெகருன்னிஷா கான், மோடி அரசை கடுமையாக சாடினார். பெண் பாதுகாப்புக்கு மோடி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை, இந்தியாவில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் பயங்கரமான சூழ்நிலையை உதாசீனம் செய்துவிட்டு, பிரதமர் உலகத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு முஸ்லிம் பெண்களை பற்றித்தான் அக்கறை, அவர்களின் பிரச்சினைகள் குறித்து அவருக்கு கவலை இல்லை. அதனால்தான் முத்தலாக் தடை அவசரச் சட்டத்தை இயற்றி இருக்கிறார். அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார்.

மேலும், பெண் கொடுமைகளுக்கு எதிராக போராட பெண்களுக்கு கற்பிக்க வேண்டும் அவர்களை அதற்காக பலப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டில் உரையாற்றிய கர்நாடக மாநில தலைவர் ஷாகிதா தஸ்னீம், பெண்களின் பாதுகாப்போடு பாஜக விளையாடுகிறது. பெண்களுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாஜகவினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வேலையின்மை பாலியல் ரீதியில் பாதிப்பு என்று பெண்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் தடை சட்டம் போன்ற கீழ்மட்ட அரசியல் ஆதாயங்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

பிரசித்தி பெற்ற சமூக போராளியும் முன்னாள் அமைச்சருமான பி.டி லலிதா நாயக் பேசுகையில்; முத்தலாக்கை தடை செய்ய மோடி அரசாங்கம் ஒரு குறிப்பு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். முத்தலாக் பற்றி கரிசனம் காட்டும் பிரதமர் மோடி முதலில் தனது மனைவி பற்றி தேசத்திற்கு சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

மாநாட்டில் “நமது பாதுகாப்புக்காக நாம் போராடுவோம்” என்ற முழக்கத்தோடு “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து!” என்ற பெயரில் ஒரு மாபெரும் பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் 6 மாதங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அந்த பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. அதன் நோக்கம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருங்கிணைந்து சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதாகவும் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் பிரபலமான பல சமூகப் போராளிகளான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் நாஸ்னி பேகம், தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் பாத்திமா முஸஃபர், சமூகப் போராளி மல்லிகே, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் யாஸ்மீன் ஃபரூக்கி, டாக்டர் அஸ்மா ஜெஹ்ரா மற்றும் அப்பாஸ் கான் கல்லூரி முன்னாள் முதல்வர் காலித் பர்வீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

 

Related posts

கூத்தாநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

admin

வடக்குமாங்குடியில் விம் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி

admin

திருச்சியில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழுக் கூட்டம்!

admin