• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • செங்கோட்டை: காவல்துறை அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட இந்துமுன்னணி கலவரம்! பாதிக்கப்பட்ட மக்களை அநீதிக்குள்ளாக்கும் காவல்துறை! அப்பாவிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
பத்திரிக்கை அறிக்கை

செங்கோட்டை: காவல்துறை அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட இந்துமுன்னணி கலவரம்! பாதிக்கப்பட்ட மக்களை அநீதிக்குள்ளாக்கும் காவல்துறை! அப்பாவிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த செப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பெயரால் முஸ்லிம்களின் சொத்துக்களை நாசம் செய்தும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகள் மற்றும் கடைகள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் வன்முறை கும்பல். இந்த கலவர தாக்குதல் காவல்துறையின் அலட்சியப் போக்கினாலும், காவல்துறையின் கண் முன்னாலும் நிகழ்த்தப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

தமிழகம் முழுவதும் இந்து சமூக மக்களின் கோவில் திருவிழாக்கள், ஊர்வலங்கள், கோவில் தேரோட்டங்கள் அமைதியாக நடைபெறும் நிலையில், இன்னும் சொல்லப்போனால் பொதுவான இந்து மக்களால் நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கூட அமைதியாக நடைபெற்று வருகின்றன. அதேவேளையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை என்றைக்கு இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் கையிலெடுத்தனவோ அன்று முதல் விநாயகர் சதுர்த்தியின் பெயரால் வன்முறை சம்பவங்களும், கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நீட்சிதான் பல்வேறு சமூக மக்களும் இணைந்து வாழும் செங்கோட்டையில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் கடந்த செப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நிகழ்த்தப்பட்ட கலவரம்.

கடந்த சில ஆண்டுகளாகவே செங்கோட்டை பகுதியில் நிலவிவரும் அமைதியை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடைத்த ஒருநாளுக்கு முன்னதாகவே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் ஊர்வலங்களை நடத்தி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கல்வீசி வன்முறையை நிகழ்த்தி வந்தது  இந்துமுன்னணி கும்பல். அதேபோல் இந்த ஆண்டு மிகப்பெரும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவல் மற்றும் கடந்தகால வன்முறை நிகழ்வுகள் ஆகியவற்றை குறிப்பிட்டுக்காட்டி, அனுமதி பெறாமல் இந்துமுன்னணி நடத்தப்போகும் அந்த ஊர்வலத்தை தடை செய்து, போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் டி.எஸ்.பி. மற்றும் உள்ளூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல அனுமதி பெறாத ஊர்வலம் நடத்தி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களின் சொத்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது இந்து முன்னணி வன்முறை கும்பல். தாக்குதல் நடந்த சமயம் காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடி நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளவில்லை. இருதரப்பு கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரே காவல்துறை வருகை தந்து, மீண்டும் அனுமதி பெறாத அந்த ஊர்வலத்தை தொடரச்செய்தது. அப்போதும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் கண்ணில் தென்பட்ட முஸ்லிம்களின் வாகனங்கள், கடைகள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட கடைகள், 16 வாகனங்கள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், வீடுகள் என சுமார் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செப்.14 அன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், ஜமாத்தினர் இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, செப்.13 அன்று இரவு நடந்த நிகழ்வுகள், கடந்தகால வன்முறை நிகழ்வுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மீண்டும் செப்.14 அன்று நடைபெறும் இந்துமுன்னணி ஊர்வலத்தை முஸ்லிம்களின் பகுதிகளுக்கு அனுமதிக்காமல் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், போதியநேரம் இல்லாத சூழலில் ஊர்வலப் பாதையை மாற்ற முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், தனது கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஊர்வலத்தை அமைதியாக கொண்டு செல்வதாகவும், அமைதியாக செல்வதற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்த அமைப்புகளின் நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதனடிப்படையில் செங்கோட்டையை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் இந்து முன்னணியின் திட்டமிட்ட சதியால் வன்முறை ஏற்படாத வண்ணம் அமைதி முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோதும் இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பு வன்முறை ஏற்படும் சூழல் ஏற்பட்டபோது முஸ்லிம் இளைஞர்களை அமைதிகாக்க வைத்தனர். அதற்காக மாவட்ட ஆட்சியர் நன்றியும் தெரிவித்தார்.

இந்த சூழலில் வன்முறை தொடர்பாக கைது நடவடிக்கைகளை தொடங்கிய காவல்துறையினர், கலவரம் நிகழ்ந்த முதல் நாளில், திருச்சியில் கட்சியின் மாநாடு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மறுநாள் அங்கு வந்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியிரின் கோரிக்கை அடிப்படையில் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், செங்கோட்டை நகர மற்றும் தொகுதி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மீதும் கலவரத்தில் ஈடுபட்டதாக பொய் வழக்குப் பதிவு செய்து, 19 முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட கடையநல்லூர் தொகுதி நிர்வாகிகளான அச்சன்புதூர் கனி, தென்காசி செய்யது மகமூத், வடகரை அப்துல் பாசித்  ஆகியோரை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை சிறையிலடைத்துள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை மெத்தனப்போக்கு காட்டாமல் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றும், கடந்தகால நிகழ்வுகளை கொண்டும், அனுமதி பெறாத அந்த ஊர்வலத்தை தடுத்தும், பலத்த பாதுகாப்பினையும் அளித்திருந்தால் செங்கோட்டை வன்முறை கலவரம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், தங்களின் தவற்றை மறைக்கவும், தாங்கள் நடுநிலை தவறாமல் விசாரணை நடத்துகின்றோம் என்பதை காட்டவும் இருதரப்பு கைது, இரு தரப்பு குண்டர் தடுப்புச் சட்டம் என காவல்துறை அநீதியாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.

இதன்மூலம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களுக்கு மென்மேலும் காவல்துறை அநீதி இழைத்து வருகின்றது. குற்றவாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஒரேதட்டில் நிறுத்தும் காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, அப்பாவிகள்  மீது பொய் வழக்குகள் புனைவதை காவல்துறை நிறுத்த வேண்டும். கலவரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தையும், பொய் வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்  என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையின் அநீதி தொடரும் பட்சத்தில், மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரச்சினைக்கு போர் தீர்வாகாது – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

admin

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin

காவல்துறை மெத்தனம்: வந்தவாசியில் முஸ்லிம்கள் பகுதி மீது இந்துமுன்னணி தாக்குதல்!

admin