தேசிய செய்திகள் பத்திரிக்கை அறிக்கை

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்! –  எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உறவுகளை இழந்து சோகத்தில் சிக்கி இருக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான செய்தியை அறிந்து நாங்கள் அதிர்ச்சியில் உறைந்தோம். இதுபோன்ற தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர இந்திய ராணுவம் தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்த வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்வுகளை சந்தித்து வருகின்றோம். பாதுகாப்பு படையினர் உயிரிழப்பை சந்திக்கும் போதெல்லாம், பிரதமர் நரேந்திர மோடி வெறும் டுவீட் மூலம் இரங்கல் தெரிவிக்கிறார்; அல்லது தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வெற்று வார்த்தை ஜாலம் காட்டுகிறார்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அரசு சில கேள்விகளுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறது.
2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏன் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை? சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த நெடுஞ்சாலையில் அவர்கள் பயணிப்பதற்கு முன்பு சோதனைச் சாவடிகளை நிறுவி, பயணம் செய்யும் வாகனங்கள் குறித்து கண்காணிப்பு செய்யாதது ஏன்? சந்தேகத்துக்கு இடமாக பயணித்த பயங்கரவாதியின் நகர்வு குறித்து, ஏன் ஐ.பி. உளவு அமைப்பும் ‘ரா’ உளவு அமைப்பும் கண்டுபிடிக்கத் தவறின? புலனாய்வு பிரிவுகளின் தோல்வி குறித்து ஆளுநர் ஒப்புக்கொண்டிருக்கிறார். பள்ளத்தாக்கு மக்களுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுக்கு என்ன நேர்ந்தது? பிரதமர் அலுவலகமும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மொத்த நிகழ்வும் முழுமையாக புலனாய்வு செய்யப்பட்டு போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் முடிவில்லாமல் நடைபெறும் கிளர்ச்சிக்கு தீர்வு காணும் வகையில், அரசியல் தீர்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இல்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பயங்கரவாதிகளுடன் இராணுவம் கண்ணாம் பூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகாலம் நீடித்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முழு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவதுதான் சரியானது என்று, நடுநிலை பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். அதுபோன்ற அரசியல் ரீதியான திட்டத்தை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா, தொடர் களப்பணியில் எஸ்.டி.பி.ஐ

admin

பிரச்சினைக்கு போர் தீர்வாகாது – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

admin

கும்பல் கொலைகளுக்கு எதிராக டெல்லியில் தர்ணா போராட்டம் | SDPI கட்சி பங்கேற்பு

admin