• முகப்பு
  • மாநில செய்திகள்
  • மக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

மக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு

மக்கள் நலன், பாசிச எதிர்ப்பு மற்றும் தமிழக நலனை முன்னிறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
இதுதொடர்பாக, சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (மார்ச்.02) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;
“எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளை இறுதி செய்யும் அதிகாரத்தை மாநில பொதுக்குழு மாநில செயற்குழுவிற்கு அளித்தது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் நாடு முழுவதும் பாசிச சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அது எல்லா துறைகளிலும் தனது கரங்களை விரித்து வருகின்றது. தன்னாட்சி அமைப்புகளை கபளீகரம் செய்வது தொடங்கி, மாநில அரசுடனான கூட்டாட்சி முறையையும் தகர்த்து வருகின்றது. மாநில நலனில் தலையிடும் வகையில் மத்திய பாஜக அரசின் செயல்பாடு அமைந்திருந்தும், மாநில அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் மோசமான அவலநிலையில் தான் தமிழகம் இருந்து வருகின்றது.
தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழக நலனை சீர்குலைக்கும் பாசிச சக்திகளின் நடவடிக்கை அதிகரித்து வந்தநிலையில், தமிழகத்திற்கு கட்டாயம் மக்கள் நலன், தமிழக நலன் சார்ந்த, ஒரு பாசிச எதிர்ப்பு தலைமை தேவை ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச எதிர்ப்பை முன்வைத்து கூட்டணி அமைக்க எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு முடிவெடுத்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
தற்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுவரும் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த மதவாத, மக்கள் விரோத கூட்டணிக்கு எதிரான சரியான மாற்று என்பது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் கைக்கோர்ப்பது தான் சரியானது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிலைப்பாடும் பாசிச, பயங்கரவாத எதிர்ப்பு தான். ஆகவே, பாசிச எதிர்ப்பின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தின் நலனை, உரிமையை நிலைநாட்டும் வகையிலும், அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டிட முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கி தற்போது கூட்டணியை இறுதி செய்துள்ளோம்.
அதன்படி தமிழகத்தில் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணியில் ஒரு தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவது, கூட்டணியின் வெற்றிக்கு இணைந்து பணியாற்றுவது என முடிவெடுத்துள்ளோம்.
பாசிச எதிர்ப்பு, மக்கள் நலன், தமிழக உரிமைகள் நலன் சார்ந்த அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழக நலனை புறக்கணித்து தங்கள் சொந்த நலனுக்காக மதவாத, மக்கள் விரோத கட்சிகளிடம் மண்டியிடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், அப்துல் கரீம், வழ.ராஜா முகமது, சுல்ஃபிகர் அலி, வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், செயலாளர் அஜ்மல் கான், இணைச் செயலாளர் கலீல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சுவாமி அக்னிவேஷ்வுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு!

admin

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு

admin

ஜனநாயகம் தழைத்திட சபதமேற்போம்!

admin