• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் – SDPI கட்சி ஆதரவு
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் – SDPI கட்சி ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விளைநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் கெயில் எரிவாயு குழாய் திட்டம், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், மாற்று வழிகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டியக்கம் சார்பாக, ஜூலை 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளின் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான அந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அகமது மற்றும் டெல்லியை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்துகொண்டு, தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரங்கள் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிராகவே கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டமும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் அதி உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தையும் விளைநிலங்களின் வழியாகவே உயர் மின்கோபுரங்கள் அமைத்து, விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி கொண்டுசெல்லப்படுகின்றது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் சாலையோரங்களில் புதைவடம் மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை வைத்து விவசாயிகளை மிரட்டி, விளைநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே, தமிழகத்திலும் கேரளாவைப் போன்று இந்த திட்டத்தை புதைவடம் மூலமாக செயல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் உரிமை, வறட்சி நிவாரண நிதி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால், மோடி அரசோ அந்த போராட்டம் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளியது. இந்நிலையில், தமிழக விவசாய நிலங்களை பாழாக்கும் வகையிலான திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைமையகத்தில் சுதந்திரதின கொண்டாட்டம்

admin

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin