பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்

நெல்லை முபாரக் (மாநில தலைவர்,எஸ்.டி.பி.ஐ. கட்சி)

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரே நாடு என்ற கொள்கையை கையில் எடுத்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு என்பன போன்ற வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் திட்டத்தையும் தீவிரம் காட்டி வருகின்றது.

ஒரே நாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி கொண்டுவரப்படும் அல்லது கொண்டுவர முயற்சிக்கப்படும் திட்டங்கள் யாவும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராகவுமே இருக்கிறது. தேசியவாதத்தின் பெயரால் மாநில சுயாட்சி கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்துள்ளது. இதன் காரணமாகத் தான் தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் மத்திய பாஜக அரசின் இதுபோன்ற ஒற்றை சிந்தாந்தத்தை பேசும் திட்டங்களை எதிர்த்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் தற்போதைய ஆளும் அதிமுக அரசு மாநிலத்தின் சுயாட்சி உரிமை கொள்கைகளை ஒவ்வொன்றாக காவு கொடுத்து வருகின்றது. தற்போது, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்துக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களும், அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துக்களும், அந்த திட்டத்திற்கு தமிழக அரசு இசைவு தெரிவித்துவிட்டதை காட்டுகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் தெரிவித்துள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசின் நிதிச்சுமை குறையும் என்ற வாதத்தின் அடிப்படையிலான தமிழக அரசின் இந்த செயல் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொதுவிநியோக திட்டத்தை சீர்குலைந்துவிடும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே, உலக வர்த்தக நிறுவனம் இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கான மானியத்தை ரத்து செய்துள்ளது. அந்த நெருக்கடியிலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே பொதுவிநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நிதிச்சுமையை காரணங்காட்டி பொதுவிநியோக திட்டத்துக்கான மானியங்களை படிப்படியாக ரத்து செய்துவந்த மத்திய அரசு, மிகப்பெரும் பொதுவிநியோக திட்டத்தை எங்கனம் சிறப்பாக செயல்படுத்த முடியும்? இதன் பின்னணியில் பொதுவிநியோக திட்டத்தை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக மானிய குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் எண்ணம் இருக்குமோ என்ற சந்தேக கேள்வி எழுகிறது?

ஏற்கனவே ரேசன் கடைகளில் போதுமான உணவுப்பொருட்கள் இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், வெவ்வெறு உணவு கலாச்சாரத்தை கொண்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் ஒரே கடையில் எப்படி கிடைக்கும்? தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் அரிசி வேறு மாநில கடையில் கிடைக்குமா? அல்லது அந்த திட்டமுறை ரத்து செய்யப்படுமா? அரிசி தவிர்த்து மற்ற மாநில கடைகளை விட தமிழகத்தில் மக்களின் உணவுப்பழக்கம் சார்ந்த அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இதனை பெறுவது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டமானது, மாநில அரசுகளால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்தை மத்திய அரசு கையில் எடுக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கையின் பின்னணியில் உணவுக்கான மானியங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் உலக வர்த்தக நிறுவனத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தும் குறுக்குவழி நடவடிக்கையே இந்த திட்டம் என தெரிகிறது.

ஆகவே, பொதுவிநியோக திட்டத்தை சீர்குலைக்கும், மாநில சுயாட்சியை பாதிக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் தமிழக அரசு இணையக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுவை முதல்வர் தர்ணா! – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

admin

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin