பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

5,8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிப்பு! கல்வியைத் தூரமாக்கும் பிற்போக்குத் திட்டம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

5,8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிப்பு!
கல்வியைத் தூரமாக்கும் பிற்போக்குத் திட்டம் – தமிழக அரசின் அறிவிப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வாகாத மாணவர்களுக்குத் தேர்வு முடிவு வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலேயே படிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மத்திய பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சோதனை ஓட்டமாகவே தெரிகிறது. கல்வி கற்பதில் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் தமிழக அரசின் பிற்போக்குத்தனமான இந்த அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகின்றது.
 
கல்வியை ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மற்றும் மலை வாழ் மக்களிடமிருந்து தூரமாக்க, பல பிற்போக்குத்தனமான திட்டங்களைத் தீட்டி, பலவகை சட்டங்களை அமல்படுத்தி வருகின்றது மத்திய பாஜக அரசு. அந்த சட்டங்களைச் செயல்படுத்தும் முதல் மாநில அரசாகத் தமிழகம் இருப்பது கவலை அளிக்கின்றது. முற்போக்கு மாநிலம் பிற்போக்கு மாநிலமாக மாறிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையான குழந்தைகளைத் தேர்ச்சி பெறவைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை நீர்க்கச் செய்யும் விதமாக, இந்த தேர்ச்சி முறை கல்வியின் தரத்தைப் பாதிப்பதாகக் கூறி, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அமலில் உள்ளபோது இது மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாகும். சுமை என்பதை விடச் சிறுவயதிலேயே மாணவர்களிடையே மன அழுத்தம், உளவியல் ரீதியான தாக்கத்தை அதிகரிக்கச் செய்துவிடும். மேலும், பொதுத்தேர்வில் வெற்றிபெறாத மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்து பெற முடியாமல் இடைநிற்றல் அதிகமாகிவிடும்.

நீட் போன்ற தேர்வுகளைக் கட்டாயமாக்கி எளிய மக்களிடமிருந்து மருத்துவக் கல்வி வாய்ப்பை பறித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றும் பாசிச சிந்தனையில் உருவான நீட் போன்ற தேர்வில் வெற்றிபெறாததால், மருத்துவக் கல்வியின் வாய்ப்பை இழந்த அனிதாக்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். இப்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்ற பிற்போக்குத் தனமான நடைமுறையை அமல்படுத்தத் துடித்து வருகின்றனர்.  

மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் பொதுத்தேர்வு முறை 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், பெற்றோர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் தெரிவித்த ஒருமித்த எதிர்ப்பினாலும், நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் அச்சத்தாலும், இந்த ஆண்டு இந்த தேர்வு முறையை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால், நிரந்தரமாக இதனை அமல்படுத்தமாட்டோம் என்ற வாக்குறுதி அளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் சிறந்த நிர்வாகமாக கல்வித்துறையும் ஒன்றாக இருந்தது. அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்ட பின்லாந்து பயணம் மூலம் கல்வியில் நவீன திட்டங்களைத் தமிழக அரசு கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த நம்பிக்கையை இந்த அறிவிப்பு தகர்த்துவிட்டது.

கல்வியின் தரத்தை மேம்படுத்தக் கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு, இதுபோன்ற அவசியமில்லாத பொதுத்தேர்வு முறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. பொதுத்தேர்வு என்ற வகையில் 10-13 வயதுக் குழந்தைகளை மனப்பாடம் செய்யும் எந்திரங்களாக மாற்றும் சூழல் ஏற்படும். அதற்கான ஏற்பாடுகளாக டியூசன், பாடம் சொல்லிக் கொடுக்க இணையதளங்கள் என்று காசை பறிக்கும் அவலங்கள் ஏற்படும்.

குழந்தைகள் ஆடி ஓடும் சிறு வயதிலேயே புத்தகப் புழுக்களாக மாற்றும் இந்த ஏற்பாடு அறிவிற்கு முரணானது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு பள்ளிக்கூடங்களையே புறக்கணிக்கிற சூழலும் உருவாகும். பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடும். பொருளாதார செலவுகளின் அழுத்தத்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வறுமை சூழலிலான பெற்றோர்கள் தயங்குவர். இது சமூகநீதிக்கு எதிரான ஆபத்தான பிரகடனமாகும். ஆரம்பத்திலேயே இந்த நடைமுறையைத் தூக்கி எறியாவிட்டால் சமூக நீதியில் மலர்ந்த தமிழக மண் கல்வி மலடாகிவிடும். பெரியாரும், அண்ணாவும், காமராஜரும், காயிதேமில்லத்தும் விதைத்த சமூகநீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடும்.

அரசாங்கங்கள், கல்வியாளர்களின் பெரு முயற்சியால் உயர்நிலைப்பள்ளி வரையிலான இடைநிற்றல் ஏறக்குறைய இல்லாமலேயே ஆகி இருக்கிறது. சிறுவயதில் ஆரம்பப் பள்ளிகளில் குடும்பச்சூழல், வறுமை காரணமாக நன்றாகப் படிக்காத குழந்தைகள், எதிர்காலங்களில் சிறந்த கல்வியாளர்களாக மாறிய நிறையப்பேர் இன்று நல்ல பணியிலும், நல்ல நிலையிலும் இருக்கிறார்கள். அதுபோன்ற வாய்ப்புகள் இந்த தேர்வு முறைகளால் பறிக்கப்பட்டு விடும்.

இன்றைக்கு கல்வியின் பயனால் இட ஒதுக்கீடுகளின் பயனால் மேலேறிவரும் எளிய சமூகங்களின் வளர்ச்சிகளை, முன்னேற்றங்களை, சகித்துக்கொள்ள முடியாமல் மீண்டும் இந்த எளிய மக்களை அடிமைகளாக மாற்றும் உத்தியே இதுபோன்ற முதிர்ச்சியில்லாமல் தேர்வு முறைகளை அமல்படுத்தும் செயல்களாகும். இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற கல்வி முறைகளை அமல்படுத்தாமல் தடுப்பதும் அறிவுஜீவிகளின், கல்வியாளர்களின், பெற்றோர்களின் கடமையாகும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்-எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு

admin

பொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் மீது தாக்குதல் – நேரில் சந்தித்து SDPI ஆறுதல்!

admin

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை உள்துறைக்கு அனுப்பிய தமிழகஆளுநர்!

admin