பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய கூட்டமைப்பினர் கைது! எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய கூட்டமைப்பினர் கைது!
ஆங்கிலேயர் கால தந்தி சட்டத்தின் மூலம் விவசாயிகளை ஒடுக்குவதா? – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

கைது செய்யப்பட்ட விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து, தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைத்திடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுபோன்ற உயர் அழுத்த மின்கோபுர திட்டங்களால் ஏற்படும் மின்கதிர் வீச்சால், புற்றுநோய் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாகச் சாலை வழியாக புதைவடம் மூலம் திட்டத்தை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மீது ஆங்கிலேயர் கால தந்தி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை சிறையில் அடைத்து வருகின்றது.

1885ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி சட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவதோ, திட்ட வரைபடத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதோ அவசியமில்லை. அதோடு அரசின் அத்தகைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேசவிரோத சட்டம், தந்தி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மட்டும் அமலில் வைத்துக்கொண்டு, மக்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கி வருகின்றன.

விவசாயிகளின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்தகைய தந்தி சட்டத்தைக் கைவிடக்கோரி, செப்.18 அன்று, திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, தந்தி சட்ட நகல் எரிக்கும் போராட்டத்தை விவசாய கூட்டியக்கத்தினர் அறிவிப்பு செய்திருந்தனர். அந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நாளை (செப்.18) போராட்டம் நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் சடையம்பாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் உள்ளிட்ட 5 பேரை பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அழைத்துச் சென்ற காவல்துறை, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த ஜனநாயக விரோத போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளி, காலாவதியான ஆங்கிலேயர் கால அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு விவசாயிகளை ஒடுக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்வதோடு ஆங்கிலேயர் கால தந்தி சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும், உயர் மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதோடு, புதிதாக மேற்கொள்ளப்படும் திட்டத்தைச் சாலையோர புதைவட திட்டம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

admin

தமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

admin

பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin