பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் -2 தேர்வில் புதிய பாடதிட்டத்தின் படி, முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசுப் பணிகளுக்கு, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அதற்காக விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்து பணியில் சேரலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்து, தமிழர்களின் வேலைவாய்ப்பை ஆளும் அதிமுக அரசு தாரை வார்த்துக்கொடுத்த நிலையில், தற்போது வருவாய் உதவியாளர், உள்ளாட்சி தணிக்கையாளர், சார்-பதிவாளர், கூட்டுறவு சங்க ஆய்வாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வில், தமிழ் ஆங்கில மொழித்தாளை நீக்கி, தமிழர்களின் ஒட்டுமொத்த அரசு வேலைவாய்ப்பையும் நிரந்தரமாக தாரை வார்த்துள்ளது தமிழக அரசு. இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெற்று வந்த நிலையில், திடீரென்று மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களையும் மேற்கண்ட பணிகளில் அதிக அளவில் நுழைக்கச் செய்யும் மறைமுக நோக்கம் கொண்டதாகவே தெரிகின்றது.

தமிழக அரசின் குடிமைப் பணிகளில் தமிழ் மொழி தெரிந்தவர்களே இடம்பெற்று வந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் தமிழர் அல்லாதவர்களையும் அந்த பணிகளில் அதிகளவில் நுழைவதற்கான வாய்ப்பை, மத்திய பாஜக அரசின் ஏவல் அரசாக செயல்படும் அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஏற்கனவே தமிழகம் சார்ந்த அஞ்சல் துறை, ரயில்வேத் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக இடங்களில் திட்டமிட்டு நுழைக்கப்பட்டும், அதற்கான தேர்வுகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டும் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வந்த நிலையில், தற்போது தமிழக அரசுப் பணிகளிலும் தமிழர்கள் அல்லாதவர்களை நுழைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், அவர்களின் எதிர்காலம் குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு பாடத்திட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஃபேல் முறைகேடு – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

admin

தலித், முஸ்லிம்கள் குறித்த கேந்திரிய வித்தியாலயாவின் கேள்வித்தாள்! – மாணவர்களிடம் நஞ்சை விதைக்கும் செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin

பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin