• முகப்பு
  • மாநில செய்திகள்
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் – தமிழகம் உள்பட தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் – தமிழகம் உள்பட தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்
காந்தியின் அகிம்சை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க உறுதியேற்போம்!
– எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிக்கை
தமிழகம் உள்பட தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று (அக்டோபர் 2, 2019) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், காந்தியின் அகிம்சை மற்றும் சமூக நல்லிணக்கக் கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைப் போன்றே இப்போதும் இந்தியாவுக்கு அதிக தேவையுடையதாக இருக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;

காந்தியின் அகிம்சை கொள்கையை அதிகம் கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இன்றைய இந்தியா உள்ளது. ஏனென்றால் இன்றைக்கு ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பெரும் வன்முறையை சந்தித்து வருவதில் தேசத்தின் நிலைமை மிகமோசமானதாக உள்ளது.

மாட்டின் பெயரால் மனிதன் அடித்துக் கொல்லப்படும் வன்முறை தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் மட்டுமல்ல நியாயத்தை பேசுகின்ற, ஜனநாயகத்தை பாதுகாக்க விளைகின்ற எல்லோரும் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

காந்தியை கொன்றவர்கள், இன்றளவும் வன்முறையை போதித்துக் கொண்டிருக்கின்றனர். தேசத்தின் நல்லிணக்கத்தை சிதைத்து வருகின்றனர். ஆகவே காந்தியின் அகிம்சை மற்றும் சமூக நல்லிணக்க கருத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைப் போன்றே இப்போதும் இந்தியாவுக்கு அதிக தேவையுடையதாக இருக்கிறது. ஆனால், காந்தியின் மிக முக்கிய கொள்கையான அகிம்சை வழியை மறந்துவிட்டு, அவர் கண்ட கனவை கொலை செய்து வருகின்றது ஆளும் அரசு.

வெறும் அகிம்சை மட்டுமல்ல, காந்தியடிகளின் முக்கியமான கொள்கைகளில் மது ஒழிப்பும் ஒன்றாக அமைந்திருந்தது. எப்படி காந்தியின் அகிம்சை கொள்கை உயிரற்றதாக மாற்றப்பட்டு விட்டதோ, அதேபோன்று அவரது மது ஒழிப்பு கொள்கையும் ஆளும் அரசுகளால் தூக்கியெறியப்பட்டு விட்டது.

சுதந்திர இந்தியாவில் காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, மது விலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலமாக தமிழகம் இருந்த நிலையில், தற்போது மது விற்பனைக்கென்றே ஒரு அரசு நிறுவனத்தை செயல்படுத்தி, மதுவிற்பனையை அதிகரிக்க இலக்கும் நிர்ணயித்து செயல்படும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. இது தேசத் தந்தை காந்திக்கு செய்யும் துரோகமாகும்.

ஆகவே, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், காந்தியின் கொள்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழகம் உள்பட தேசம் முழுவதும் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான உத்தரவினை தமிழக முதல்வர் இன்றே அறிவிக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், காந்தியின் மகா கோட்பாடான அகிம்சை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நமது வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க உறுதி மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஃபேல் முறைகேடு – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

admin

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் எதிர்ப்பு

admin

காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin