• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • காஷ்மீர் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆய்வுக்குழு களநிலவரம் மற்றும் காஷ்மீர் அமைதிக்கு அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிக்கை
தேசிய செய்திகள்

காஷ்மீர் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆய்வுக்குழு களநிலவரம் மற்றும் காஷ்மீர் அமைதிக்கு அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிக்கை

காஷ்மீர் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆய்வுக்குழு

களநிலவரம் மற்றும் காஷ்மீர் அமைதிக்கு அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிக்கை

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்குறிஞர் ஷர்ஃபுத்தீன் அஹ்மத் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி, தேசிய செயலாளர் சீதாராம் கோஹிவால் உள்ளடக்கிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மூவர் குழு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தங்கி ஆய்வை மேற்கொண்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி அவசரகதியில் தன்னிச்சையாக பாஜக அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்திய ஜனாதிபதியின் நிர்வாக உத்தரவால் அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35A செயலிழக்கச் செய்தபின், கடந்த ஐம்பது நாட்களாக காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரண நிலையின் உண்மை நிலவரத்தின் முதல் ஆய்வை இக்குழு மேற்கொண்டது.

காஷ்மீர் பயணம் குறித்து டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்புதீன் கூறுகையில்,

களநிலவர ஆய்வறிக்கை :

காஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் வலைதளம் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல், பாஜக தவிர்த்து பிற எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், சுற்றுலா வந்தவர்கள் மற்றும் மாணவர்கள் வலுக்கட்டாயமாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். உணவு மற்றும் தங்கும் விடுதிகளை எதிர்பாராதவாறு பூட்டி மூடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் துப்பாக்கிகளை ஏந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையின் நடமாட்டம் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் உள்ளது.

கடந்த ஐம்பது நாட்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர் மற்றும் மஹல்லா தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் வெளியே உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்து சிறைகளில் அடைக்கும் கொடூரம் நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டுள்ளதோடு மனிதத் தன்மையற்றதாக உள்ளது. உதாரணமாக, ஓட்டல் சென்-டவரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு கொடூரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

முழு ஸ்ரீநகர் உட்பட பிற எல்லா இடங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதோடு இல்லாமல், எல்லா வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது.

அறுவடைக் காலத்தில் பழங்கள் பறிக்காமல் போனதால் அழுகிப் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதப்படுப்பட்ட உலர் பழங்கள் வாங்குவோர் இல்லாமல் அழிந்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

போக்குவரத்துத்துறை வாகனங்களை இயக்காததால் அவசரத் தேவைகளுக்காக பயத்துடன் துணையோடு தைரியத்தை வரவழைத்து வெளியே வந்தாலும், துப்பாக்கிகள் ஏந்திய இராணுவ வீரர்கள் அச்சுறுத்தலாக உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆய்வுக்குழுவின் உறுப்பினர்கள் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தால் பீதிக்குள்ளான ஸ்ரீநகரின் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களான சவுரா மற்றும் டவுன்டோன் சார்ந்த முக்கியப் பகுதிகளில் உள்ள பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களோடு உரையாடினர்.

ஸ்ரீநகரின் முக்கிய அடையாளங்களான ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத் பல் தர்கா மூடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 5 முதல் அங்கே வெள்ளிக்கிழமை மற்றும் பக்ரீத் பெருநாள் தொழுகைக்கூட நடைபெறவில்லை என்பதை அறியமுடிந்தது.

இந்திய அரசின் காஷ்மீர் சம்மந்தமான திடீர் முடிவு காஷ்மீர் மக்களுக்கு தாங்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தியதோடு பல்வேறு அலுவல்கள் காரணமாக பள்ளத்தாக்கில் தங்கியுள்ள இந்தியர்களையும் வேதனைக்குள்ளாக்கிவிட்டது. ஜக்மோகன் ஆளுநராக இருந்ததற்கு பின்பு வரலாற்றில் முதன்முறையாக அமர்நாத் யாத்திரைக்கு அரசு தடைவிதித்துள்ளது.

ஒரு பொறுப்புள்ள இயக்கம் என்ற அக்கறையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மீண்டும் நிலைநாட்டும் வண்ணம், எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கருதுகிறது.

நாட்டின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், வெளிநாட்டுச் சக்திகள் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச மயமாக்குவதைத் தடுப்பதற்கும், அதற்கேற்ற சூழ்நிலையை விரைந்து அரசு உருவாக்கவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்துகிறது. எனவே, காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க கீழ்க்காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது.

1. ஆக.08.2019க்கு முன்பிருந்த தகவல் தொடர்புகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.

2. கைது செய்யப்பட்டுள்ளதாக கருதப்படும் 13,000 சிறார்கள், இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. ஆக.08 க்குப் பின் சிறைக்காவலிலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

4. பள்ளத்தாக்கின் கடைவீதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

5. ஜாமிஆ மசூதி மற்றும் ஹஜ்ரத் பல் தர்கா உட்பட அனைத்து மசூதிகளையும், வழிபாட்டுத் தலங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிட வேண்டும்.

6. பழங்கள் மற்றும் உலர்பழங்கள் வணிகம் மற்றும் போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

7. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை நிலைநாட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

8. இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 370 மற்றும் 35A-வை மீண்டும் நிலைநிறுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

9. காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் மிதமிஞ்சிய இராணுவக் குவிப்பைத் திரும்பப்பெற வேண்டும். எல்லைகளைக் காக்க அவர்களைப் பயன்படுத்து வேண்டும்.

10. மக்கள் தொகைக்கேற்ப துணை இராணுவப்படையை வீதிகளிலும், வசிப்பிடங்களிலும் குறைக்க வேண்டும்.

11. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜனநாயக அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகளை தாமதமின்றி நீக்கி, இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைப்பு உறுதிப்பாட்டையும், காஷ்மீரின் தனித்துவ கோட்பாடுகளையும் மதித்துக் காக்க வேண்டும்.

Related posts

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

admin

ஃபாலஸ்தீனியர்களுக்காக ஜெருசலத்தை மீட்டெடுப்போம்; எஸ்.டி.பி.ஐ

admin

கேரள மக்களின் துயரத்தில் பங்கெடுப்போம்!

admin