• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக பேசியதோடு, மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முகாமிட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், நேற்று அதிமுக பிரமுகர் ஒருவர் அமைச்சரிடம் முஸ்லிம்கள் தரப்பில் கோரிக்கை மனுக்களை அளிக்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மனு அளிக்கச் சென்ற முஸ்லிம் ஜமாத்தினரிடம், தங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்? அதிமுகவுக்கும் முஸ்லிம்களுக்கு என்ன சம்பந்தம் என்பது போல பேசியுள்ளார். அதோடு அந்த மனுவை வாங்க மறுத்ததோடு, தங்களுக்கு வாக்களிக்காமல் இப்படி நடத்து கொண்டீர்கள் என்றால், காஷ்மீரில் நடத்து போன்று முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பேசியுள்ளார். மேலும், முஸ்லிம்களிடம் தான் மனுவை வாங்க மாட்டேன் என்றும், யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம் போய் மனுவை கொடுங்கள் என்று பேசி, மனு அளிக்கச் சென்ற முஸ்லிம்களை அவமதித்துள்ளார்.

ஒரு அமைச்சர் என்ற முறையில் அவரிடம் மனு அளிக்க, அதிமுக கட்சியை சேர்ந்த ஒருவர் தான் வலுக்கட்டாயமாக வந்து முஸ்லிம்களை அமைச்சரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்களிடம் மனுவை வாங்க மறுத்ததோடு, அவர்களை காஷ்மீரை போன்று ஒதுக்கி வைக்க வேண்டிய நிலைமை வரும் என்று மிரட்டும்படி சொல்வது கடும் கண்டனத்திற்குரியது. அமைச்சரின் பேச்சு அவர் உறுதியேற்ற அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த பேச்சுக்கு முஸ்லிம்களிடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்வது வாக்காளரின் உரிமை அந்த உரிமையை மீறும் விதத்தில், தங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக அரசு எதுவும் செய்யாது என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

இந்த சூழலில் தமிழக முஸ்லிம்கள் காஷ்மீர் போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று சங்பரிவார் அமைப்புகளை போன்று அவர் பேசியது சாதாரணமான ஒன்று கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமான அமைச்சராகவே அவர் இருந்து வருகின்றார். ஆனால், தங்களுக்கு வாக்களிக்காத அதுவும் சிறுபான்மை சமூக மக்களிடம் மனுவை வாங்க மாட்டேன். அவர்கள் நெருக்கடிகளை விரைவில் சந்திப்பார்கள் என்ற வகையில் சொல்வது ஆபத்தானது.

தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றார். அவரின் எல்லைமீறிய பேச்சின் வெளிப்பாடுதான் நாங்குநேரி தொகுதியில் சிறுபான்மை மக்கள் குறித்து பேசியது.

மேடை நாகரீகம் இல்லாமல் பேசுவது, அரசியல் தலைவர்களை நாகரிகமற்ற முறையில் பேசுவது போன்ற மோசமான செயல்களை செய்துவரும் ராஜேந்திர பாலாஜி, தனது செயல்கள் மூலம் தமிழக அரசுக்கு அவப்பெயரை தொடர்ந்து உருவாக்கி வருகின்றார்.

ஆகவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசும், அதிமுக தலைமையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசயத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

காவல்துறை மெத்தனம்: வந்தவாசியில் முஸ்லிம்கள் பகுதி மீது இந்துமுன்னணி தாக்குதல்!

admin

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்!

admin

பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin