இறையாண்மை கொண்ட மதச்சார்பின்மை, சோசலிச மற்றும் ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, உலகில் சமதர்மம், பாதுகாப்பு மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு உள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன்னை வடிவமைத்த தலைவர்களின் கனவுகளை தகர்த்துவிட்டது. சோசலிசம் மற்றும் ஜனநாயக கொள்கையிலிருந்து விலகியதோடு அல்லாமல் புதிய தாராளமய மக்கள் விரோத கொள்கையில் புகலிடம் அடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கடன் தொல்லையால் கிராமங்கள் பெரும் சீரழிவை சந்திக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மற்றும் ஏழை மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு விரட்டுகிறது முதலாளித்துவம். மேலும் அது இயற்கையான சுற்றுப்புற சூழலையும் அழிக்கிறது.

ஆட்சியாளர்கள் கூறும் பளபளப்பான புள்ளி விபரங்களுக்கும், எதார்த்த நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மிகவும் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் இந்திய பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி நாட்டை சுரண்டுகிறார்கள். வளமான நாடு என்ற கொள்கை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆனால் பணக்காரர்களுக்கும், உணவு, உடை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

மனித வளர்ச்சி குறியீட்டில் இன்றளவும் நம் நாடு ஏழை நாடுகளை விட மிகவும் பின்தங்கியே உள்ளது. நம் நாடு உணவு பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. கிராமங்களில் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் நாட்டின் வளங்கள் அனைத்தும் தேவையில்லாத செலவினங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. அளவுக்கு மீறிய உணவு பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் நடுத்தர, ஏழை மக்களை வாட்டுகிறது.

தொழில்துறை ஊழியர்களின் ஊதியம் குறைந்து வரும் வேளையில் பெரு நிறுவனங்களின் உயர் பதவிகள் வகிப்பவரின் ஊதியம் விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. அரசாங்கம் முதலாளி வர்க்கத்தை காப்பதில் மும்முரமாகவும், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் தனக்கு இருக்கும் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முனைப்பு காட்டுகிறது. தொழிலாளர்கள் தங்களின் உரிமையை கேட்கும் அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர்.

ஊழல் என்பது அடிமட்டம் முதல் உயர்பதவி வகிப்பவர் வரை எங்கும் நீக்கமற பரவலாக்கப்பட்டுள்ளது. அது காவல் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து நிர்வாக இயந்திரங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தை தொழிலாளர்களின் வரிசையில் நம்நாடு முன்னணியில் உள்ளது.

மேலோட்டமான பெயரளவிலுள்ள மதச்சார்பின்மைக்குப் பின்வாசல் வழியே ஃபாசிச பயங்கரவாதிகள் வளர்ந்து வருகிறார்கள். ஹிந்துத்துவா அரசியல்வாதிகள் தங்கள் முஸ்லிம் விரோத முகத்தை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். போலியான வளர்ச்சி முழக்கங்களை எழுப்பி எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று முனைந்து செயலாற்றுகிறார்கள்.

பல போலியான என்கௌண்டர் கொலைகளை அரசு இயந்திரங்கள் செய்தன. அவை முழுவதும் வகுப்புவாத மயமாகிவிட்டதையே இது பறைசாற்றுகிறது. முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அடிப்படை உரிமைகளும், வசதிகளும் தரப்படாமல் ஒதுக்கப்படுகிறார்கள். அரசு இன்னும் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையின் மேல் அமர்ந்திருக்கிறது. பாதுகாப்பு துறையின் போலி அத்துமீறல்களுக்கு சில பிரிவினர் பலியான பொழுது அதற்கெதிராக அரசாங்கம் தன் சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லை.

நகர்புற சேரிகளில் தலித்துகள் மலிவான கூலி தொழிலாளர்களாக குவிக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் அவர்கள் தங்கள் உரிமைகளை பற்றி பேசுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகின்றார்கள். இந்தியாவின் மத்திய பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுக்காக அநியாயமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இந்தியா மிக வேகமாக ஆட்பட்டு வருகின்றது. அணிசேரா மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகள் ஏட்டளவில் மட்டும் உள்ளன. தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கும், புது புது பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கும், உளவுத்துறை நிறுவனங்களுக்கும் அதிக செலவினங்கள் செய்யப்படுகின்றன.

ஆளும் வர்க்கங்கள் அமெரிக்காவோடு கைகோர்த்து நிற்பதுதான் மிகவும் துரதிஷ்டவசமானது, வெறும் வாயளவில் ஃபலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசாங்கம் சியோனிச இஸ்ரேலுடன் தனது பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துகின்றது. அமெரிக்காவுடனுள்ள இராஜங்க உறவும், இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தமும் நாட்டின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது. மனிதகுல விரோத நடவடிக்கை மேற்கொள்ளும் இஸ்ரேலுடன் இந்தியா உறவு வைத்துள்ளது எச்சரிக்கை மணியை அடிக்கிறது. அமெரிக்க நலன்களுக்குச் சாதகமாகவே அண்டை நாடுகளுடன் இந்தியா தன் உறவுகளை வடிவமைத்துக்கொள்கின்றது.

நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. நிர்வாகக் கட்டமைப்பின் அனைத்துப் பரப்பிலும் மிகவும் ஒதுக்கப்பட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.

ஆயுதப் படையில் அவர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள், நீதித்துறையில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் மட்டுமே உயர்கிறார்கள், பாதுகாப்புத் துறையிலும் முஸ்லிம்களுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ளன, பொருளாதாரத்தில் அவர்கள் வளர்ச்சியின் வெளிவட்டத்தில் உள்ளார்கள்.

ஒருசில துறைகளில் தலித்துகளைத் தவிர முஸ்லிம்கள் தொடர்ந்து பிற சமூகத்தினரை விட மிகவும் பின்தங்கியே உள்ளனர். அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட ஆனால் குறைவாக அமல்படுத்தப்பட்ட சச்சார் கமிட்டி நடவடிக்கைகளும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமலேயே அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் முஸ்லிம்களின் அச்சத்தை பயன்படுத்தி அவர்களின் வாக்குகளை சுரண்டி வருகின்றார்கள் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.

இதற்கு மாறாக தலித்துகளின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக உழைப்போம் என்று பிரகடனப்படுத்தி துவங்கப்பட்ட கட்சியின் தலைவர்கள் அவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள்.

SDPI – அரசியல் மாற்று சக்தி

முஸ்லிம்களையும் தலித்துகளையும் இன்ன பிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரையும் சக்திபடுத்துவதற்காக கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 21 அன்று துவக்கப்பட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) நேர்மறை அரசியல் வழியில் பாடுபட உறுதிமொழி எடுத்துள்ளது.

SDPI என்பது உன்னத கொள்கை, ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் உன்னத தலைவர்களை கொண்ட தேசிய கட்சி.

SDPI என்பது அனைத்து தரப்பு மற்றும் அனைத்து மாநில மக்களையும் ஐக்கியப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்ற நோக்கத்தோடு செயல்படும் அனைத்திந்திய கட்சி.

SDPI ஒரு குறிப்பிட்ட தலைவரையோ, குடும்பத்தையோ சார்ந்திராமல் கூட்டு முடிவை சார்ந்து செயல்படக்கூடியது.

SDPI ஒரு சமூக அரசியல் இயக்கமாகும். தன் செயல்வீரர்களை கொண்டு தேர்தல் இல்லாத காலங்களில் கூட ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

SDPI செயல்வீரர் கட்டமைப்பை கொண்ட ஒரு அமைப்பாகும்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

SDPI குடிமக்களின் முன்னேற்றத்திற்கு இரண்டு விஷயங்கள் தடையாக இருப்பதாக உணர்கிறது. ஒன்று பசியைப் பற்றிய பயம். மற்றொன்று ஃபாசிச, அரச பயங்கரவாதத்தின் பயம். SDPI இவை இரண்டையும் அகற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளது. எனவேதான் பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை என்பதை முக்கிய இலக்காக கொண்டுள்ளது.

SDPI மக்களை பசி மற்றும் பயத்திலிருந்து விடுவிக்கவும், அனைத்து விதமான அநீதிகளை களையவும், சிறுபான்மையின தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமை கிடைக்கவும் தேர்தல் முறையை மாற்றவும், சமூகத்தை ஜனநாயகப்படுத்தி ஒரு உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவவும் உறுதிபூண்டுள்ளது.

SDPI கட்சி கீழ்கண்ட அடிப்படைக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டது.

1. தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம்.
2. சமுதாய மற்றும் அரசியலை ஜனநாயகப்படுத்துதல்.
3. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல்.
4. பயம் மற்றும் பசியிலிருந்து மக்களை விடுவித்தல்.
5. சுற்றுப்புற சூழலுக்கு உகந்த அழிவற்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள்.
6. நலிந்த பிரிவினரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.
7. ஒடுக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல்.
8. பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் கலாச்சார தனித்துவத்தை பாதுகாத்தல்.
9. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை வலிமையடையச் செய்தல்.
10. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் ஒற்றுமைப்படுத்துதல்.