1. டிசம்பர் 6 – பாபரி மஸ்ஜித் இடிப்பு
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கடந்த 1992 டிசம்பர் 6,அன்று பல நூற்றாண்டுகால பாபரி மஸ்ஜிதை ஆர்.எஸ்.எஸ்,பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல்,சட்டத்துக்கு புறம்பாக இடித்து தரைமட்டமாக்கியது.ஆனால் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது முஸ்லீம்களின் பிரச்சனை அல்ல. மாறாக இது நமது தேசத்தின் பிரச்சனை. இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், மதச்சகிப்பு தன்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்,பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல்களால் விடுக்கப்பட்டுள்ள சவால் என்பதை நாம் உணர வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்,நாட்டின் நலன் மீது அக்கரை கொண்டவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முன்வரவேண்டும்.

எனவே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும்.சட்டத்துக்கு புறம்பாக பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 6 ம் தேதி இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும்,பல்வேறு அறவழிப்போராட்டங்களும் நடைபெற உள்ளது.

அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பல்வேறு அறப்போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற போராட்டங்களில் பொதுமக்கள்,வியாபாரிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

2. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது.
பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.
தெகலான் பாகவி அறிக்கை!
30 நவம்பர் 2016 / சென்னை
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்கு ஆலை சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகின்றது. இந்த ஆலை மூலம் நேரிடையாகவும்,மறைமுகமாகவும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். சாதாரண ஸ்டீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் , சுருள், நாணய வில்லைகள்,தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனமாக திகழ்கிறது.இங்கு தயாரிக்கப்படும் தகடுகள் உலகின் பல பகுதியிலும் விரும்பி வாங்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சேலம் உருக்காலை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்திலேயே செயல்பட்டு வருவதாகவும். இதையடுத்து, அதன் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என சில தினங்களுக்கு முன் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.மத்திய அரசின் இம்முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமைந்ததிலிருந்து மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் பன்னாட்டு பெரு நிறுவனங்களையும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களையும் வளப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன.பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விட்டு தனியார்மயத்தை ஊக்குவிக்கும் மத்திய பாஜக அரசின் போக்கு தேச நலன்களுக்கு உகந்ததல்ல.

மேக் இன் இந்தியா திட்டத்தைப் பற்றி பெருமையாக பேசுகின்றவர்கள் தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க துடிக்கின்றனர்.சேலம் உருக்காலை நிறுவனம் போன்ற உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றாமல், தனியாருக்கு விற்பனை செய்துவிட்டு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைசெயல்படுத்த வேண்டும் என அழைக்கிறார்.இது மத்திய பாஜக அரசின் இரட்டை நிலையையும்,தொழிலாளர்களை வஞ்சிக்கும் சதி திட்டத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும்,அதனை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.சேலம் இரும்பு உருக்காலை என்பது தமிழகத்தின் பலம்.அதனை பலவீனப்படுத்த மத்திய அரசு முயல்வது என்பது தமிழகத்தையே பலவீனப்படுத்துவதை போன்றது.

எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும்,அதனை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

3. இரங்கல் செய்தி.
ரஞ்சிதம் அம்மாள் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்கிற செய்தியை கேட்டு வருந்துகிறேன்.

ஐயா நல்லகண்ணுவின் சமுதாய மற்றும் அரசியல் பணிகளுக்கும்,மக்கள் நல போராட்டங்களுக்கும் மிகவும் உறுதுணையாய் இருந்தவர் ரஞ்சிதம் அம்மாள்.அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை பிரிந்து வாடுகின்ற ஐயா நல்லகண்ணு அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்,தோழர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

4. திருச்சி-துறையூர் வெடி விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பலி – விரிவான விசாரணைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா த.முருங்கப்பட்டியில் உள்ள வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற இந்த தொழிற்சாலை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து நிறுவனங்களே இப்பகுதியில் இருக்கக் கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.

தமிழகத்தில் இது போன்ற வெடிவிபத்துகளால் தொடர்ச்சியாக தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெடி விபத்து சம்பந்தமாக விரிவான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள இது போன்ற வெடிமருந்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற தொழிற்சாலைகள் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்தியதா என கண்டறிந்து எதிர்காலத்தில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

5. முதல்வர் ஜெயலலிதா மறைவு! – தமிழகத்திற்கு பேரிழப்பு!
எஸ்.டி.பி.ஐ. கட்சி அனுதாபம்!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்கும், தமிழக மக்களுக்கும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதா அவர்கள் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.கவை கட்டிக் காத்தவர்.

தமிழக முதல்வராக சிறப்பாகபணியாற்றியவர். வியக்கத்தகு ஆளுமையும், நிர்வாகத் திறனும் மிக்கவர். தமிழகத்தின் உரிமைக்காக உறுதியாக நின்று போராடியவர். தனக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனையான நேரங்களிலும் உறுதிமிக்கவராக அதை எதிர்கொண்டவர்.அவரது மறைவு அ.இ.அ.தி.மு.கவிற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.தமிழக மக்களின் கவலையிலும், துக்கத்திலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

அவரை இழந்துவாடும் அவரது உறவினர்கள், அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஒட்டுமொத்ததமிழக மக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும்தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தின் அமைதியையும், எதிர்காலத்தையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, அதை மனதில் கொண்டு அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிக்குமாறு, அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

6. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி!எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பு – விரைந்து செயல்படுத்த கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது;

போக்குவரத்து நெரிசல் இடையூறின்றி, சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், நகரின்உள்புற போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தை சென்றடையும் வகையில், சுமார்18.3 கி.மீ. உயர்த்தப்பட்ட பறக்கும் சாலை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் இணைந்து சுமார் ரூ.1,816 கோடி திட்ட மதிப்பில்இத்திட்டத்திற்கான பணிகள் 2010 செப்டம்பர் முதல் தொடங்கியது. இத்திட்டத்தின் பறக்கும் சாலை பாலத்திற்காகஏராளமான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டன. சுமார் 500 கோடி ரூபாய் செலவில், 20 சதவீத பணிகள்முடிந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோடு இத்திட்டப் பணிகளுக்கும் தடை ஏற்பட்டது. கூவம்நீரோட்டத்தை தடுக்கும் வகையில், மேம்பால சாலை திட்டம் நடப்பதாகக் கூறி, தமிழக பொதுப்பணித்துறை 2012ல்திட்டப் பணிகளுக்கு தடை விதித்தது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசும்தொடர்ந்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், சில நிபந்தனைகளுடன், மதுரவாயல்மேம்பால சாலை திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை கடிதம்அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இம்முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். எனினும் இம்முடிவை தமிழக அரசுஇதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை நகரின் போக்குவரத்துநெரிசலுக்கு விடிவு பிறக்கும் என்பது மட்டுமல்லாமல், நூற்றாண்டு பெருமை கொண்ட சென்னை துறைமுகத்தின்வளர்ச்சிக்கும் அது வழிவகுக்கும் என்பதால், இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

7. வர்தா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சீரமைப்பு பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் – மத்திய அரசு ரூ.5000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அதிதீவிர வர்தா புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்தும், மின்சார விநியோகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகமும் பல இடங்களில் மேற்கொள்ளப்படவில்லை. அத்தியாவசிய பால் கிடைக்கப் பெறுவதில் கூட மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசின் சீரமைப்பு பணிகள் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும், அதிகளவில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக 3 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் இயல்புநிலை சீராகவில்லை. மின்சார விநியோகம் இல்லாததால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, தமிழக அரசு மேலும் துரித கதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து, மின்சார சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவில் பணியாளர்களை நியமித்து, நிலைமையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடை விரைவில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வர்தா புயலால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக தமிழக அரசு கோரியுள்ள நிதியை வழங்கவும், வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

8. பெட்ரோல் டீசல் விலை உயர்வு – கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21ரூபாயும், டீசல் விலை 1.79 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே மத்திய பாஜக அரசின் முன் யோசனை இல்லாத ரூபாய் நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவர்கள் மேலும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போது சொற்ப அளவில் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதே வேளையில் அந்த விலை குறைப்பு பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையாமல் இருக்க கலால் வரி அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால், எண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்படும் போது அதிகரிக்கப்பட்ட கலால் வரி குறைக்கப்படுவதில்லை. இதனால், உயர்த்தப்பட்ட எண்ணெய் விலை மற்றும் அதிகரிக்கப்பட்ட கலால் வரியால் சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே தான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணங்காட்டி வரைமுறை இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தி வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான கடந்த மத்திய ஆட்சியில், எரிபொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் விலை நிர்ணயம் செய்கின்ற உரிமையினை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெற மத்திய பாஜக அரசு தயங்குகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையே நீடிக்கிறது.

ஆகவே, மத்திய அரசு எண்ணெய் விலை உயர்வை திரும்பப்பெற உடனடியாக நடவடிக்கை வேண்டும். எண்ணெய் விலை குறைவின் போது உயர்த்தப்பட்ட கலால் வரி உயர்வை, எண்ணெய் விலை அதிகரிப்பின் போது குறைக்க வேண்டும். விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

9. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்த எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில நிர்வாகிகள்

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மு.க.அழகிரி ஆகியோரிடம் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் கேட்டறிந்ததோடு, கலைஞர் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெறவும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

தொடர்ந்து பத்திரிக்கையாளரை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி; “திமுக தலைவரும் முத்தமிழ் அறிஞருமான, முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் உடல் நலம் குறித்து, திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மு.க.அழகிரி ஆகியோரிடம் கேட்டறிந்தோம். கலைஞர் அவர்களின் உடல் நலம் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் தெரிவித்த அவர்கள், உயர்தர சிகிச்சையின் மூலம் கலைஞர் அவர்களின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் சிகிச்சை முடிந்து கலைஞர் அவர்கள் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தனர். அப்போது, டாக்டர் கலைஞர் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற எங்களின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்தோம். தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் மிகச்சிறப்பானது. தமிழகத்தின் மிக மூத்த தலைவரான அவர் விரைவில் உடல்நலம் பெற்று, மென்மேலும் தமிழ் சமூகத்திற்கு அவர் தொண்டாற்றவும் எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” என்றார்.

இதன்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன், வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், துணைத் தலைவர் கலீல் ரஹ்மான், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாநில தலைவர் ஃபாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி பிலால், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இந்த செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

10. சீமைக்கருவேலம் மரங்களை அகற்ற 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு – தமிழகம் முழுவதும் செயல்படுத்த கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தின் விளைநிலங்கள், நீர் ஆதார இடங்கள் என 25 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பரவலாக காணப்படும் சீமைக்கருவேல மரங்களை, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் 20 நாட்கள் கால அவகாசத்திற்குள் அழிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

நிலத்தடி நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை உருவாக்கும் சீமைக் கருவேல மரங்கள், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. சீமைக்கருவேல மரத்தின் விபரீதம் அறியாமல், 1950-களில் தமிழகத்தில் வேலிக்காகவும், எரிபொருள் தேவைக்காகவும் பல இடங்களில் அதன் விதைகள் தூவப்பட்டன. ஆனால், சீமைக்கருவேல மரங்களின் வேகமான விதைப்பரவல் காரணமாக இன்றைக்கு தமிழகத்தின் சாபக்கேடாக அது மாறிவிட்டது.

வறட்சியை தாக்குப் பிடித்து, எந்த நிலத்திலும், எந்த காலச் சூழலிலும் வளரும் சீமைக்கருவேல மரங்கள், தமிழகத்தில் விவசாய நிலங்கள், குளங்கள், ஏரிகள், புறம்போக்கு நிலங்கள் என பல லட்சம் ஏக்கர் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. இதனால், நிலத்தடி நீர் குறைந்து, விவசாய நிலங்களும் தரிசாகி வருகின்றன. சீமைக்கருவேலம் மரம் அதிகளவில் வெளியிடும் கார்பன்டை-ஆக்ஸைடு வாயுவால் சுற்றுப்புற காற்று மண்டலமும் நச்சுத்தன்மை அடைகிறது. இதன் காரணமாக பறவையினங்கள் கூட சீமைக்கருவேல மரங்களை அண்டுவதில்லை.

அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையின் காரணமாக அங்கு சீமைக்கருவேல மரங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்திலும் குறிப்பாக சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படும் 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின், மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கான திட்டம் மற்றும் வழிமுறைகள் உள்ளடக்கிய அறிக்கையை, 2016 ஜனவரியில் அளிக்க வேண்டும்’ என, வனத்துறை செயலருக்கு 2015-ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைச் செயலர்கள் இடம் பெற்ற உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், நீதிமன்றம் கோரிய செயல்திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், மதுரை, தேனி, விருதுநர், ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேலம் மரங்களை வேரோடு அகற்ற, அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 20 நாட்கள் காலக்கெடு விதித்து, இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, பருவமழை பொய்த்து வறட்சியின் பிடியில் சிக்கிவரும் தமிழகத்தில், வறட்சியின் காரணிகளில் ஒன்றான சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதன் மூலம் வறட்சியின் பாதிப்பையும் ஓரளவு தடுக்க முடியும் என்பதால், நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையை 13 மாவட்ட தலைநகர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை, அரசின் நடவடிக்கையால் மட்டும் ஒழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. இதற்காக அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் அடங்கிய ஒரு பெரும் இயக்கத்தை அரசு முன்னெடுத்து, அதன் மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முன்வர வேண்டும். இதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

11. ராமமோகன ராவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், தனது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பல குற்றச்சாட்டுளை முன்வைத்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை மூலம் தலைமைச் செயலகத்தை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர்; தனது மகனுக்கான வாரண்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்று சோதனையிட்டது ஏன்? என்றும், தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவப் படை நுழைய எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும் தன் மீதான புகார்களுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா? என வினவியுள்ள அவர், ஜெயலலிதாவால் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட நானே இப்போதும் தலைமைச் செயலாளர் எனவும் தெரிவித்துள்ளார்.

ராமமோகன ராவின் குற்றச்சாட்டுகள், மத்திய அரசின் தலையீடு இந்த விசயத்தில் இருப்பதாக தெரிவித்த அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனின் குற்றச்சாட்டை உறுதிசெய்வது போல் உள்ளது. ஆனால், தமிழக முதல்வர் இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்காததால், இந்த விசயத்தில் உண்மையான நிலை என்ன என்பதில் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

வருமான வரித்துறைக்கு சோதனை நடத்த அதிகாரம் உள்ள போதும், ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்கும் காவல்துறை மீது நம்பிக்கை கொள்ளாமல், துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை நடைபெறும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதா? இதுபோன்ற நெருக்கடியான சூழல் மூலம் அதிமுக அரசை, மத்திய அரசு மறைமுகமாக அடிபணிய வைக்க முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகமும் மக்களிடம் எழுந்துள்ளது. மேலும், வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று ஒருவாரம் ஆன நிலையிலும், அவர் செய்த முறைகேடு என்ன? எதற்காக தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றது? யாரிடம் அனுமதி பெற்று சோதனை நடைபெற்றது? என்பன போன்றவற்றிற்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. ஆகவே, மத்திய, மாநில மத்திய, மாநில அரசுகள் தெளிவான விளக்கமளித்து, இதுதொடர்பாக மக்களிடையே நிலவிவரும் குழப்பத்தை போக்க வேண்டும்.

ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகள் ரகசியமாக இல்லாமல், வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தப்படும் போதுதான், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

12. வாழ்நாள் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்! உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொலை வழக்கு ஒன்றில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த 4 தண்டனைக் குற்றவாளிகள், தங்களின் நீண்ட நாள் சிறைவாசத்தை சுட்டிக்காட்டி, தங்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை போன்றவற்றில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுக்கு தான் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளது என்பது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதேப்போன்று கடந்த அக்டோபரில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் சிறைக் கைதி வீரபாரதியின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிறைவிதிகளின் படி ஆயுள் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யப்பட உரிமை உண்டு என உத்தரவிட்டு, இதுதொடர்பான மனுக்களை பரிசீலிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அறியாமையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நீதிமன்ற உத்தரவுகள் நீண்ட நாள் ஆயுள் சிறைக் கைதிகளை சட்டப்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, தமிழக சிறைகளில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதால், அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைவாசிகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், வாழ்நாள் ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு அவர்களின் விடுதலையை தொடர்ந்து நிராகரித்து வருகின்றது. தமிழக அரசின் இந்நடவடிக்கை வருத்தமளிப்பதாக உள்ளது.

ஆகவே, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் அனைத்து ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய முன்வர வேண்டும். இனியும் தொடர்ந்து இழுத்தடிப்புகளை மேற்கொள்ளாமல் விடுதலை நடவடிக்கையை விரைவாக தொடங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

13. சிரியா – மியான்மர் மனித படுகொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி
ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது!

சிரியாவின் அலெப்போ, ஹலப் உள்ளிட்ட மகாணங்களில், அப்பாவி மக்கள் மீது அந்நாட்டு அரசுப் படைகளுடன் இணைந்து ரஷ்ய கூட்டுப்படைகள் இணைந்து நடத்தும் கொடூர தாக்குதல் மற்றும் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தாக்குதல் ஆகியவற்றை ஐ.நா. சபை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று (டிச.30) மாலை சென்னை அடையாறு ஐ.நா. (யுனிசெப்) அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், பொது செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது; மெசபடோமியா எனும் உலக நாகரிகத்தின் தொட்டில் என்ற புகழுக்குரிய சிரியா தேசம் இன்றைக்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையான அதிகார மற்றும் ஆயுதப் போட்டியில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளது. பஸர் அல் அஸாத்தின் சர்வாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படைகளும், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய கூட்டுப் படைகளும் இணைந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

சிரியாவின் இந்த சூழலை பயன்படுத்தி அங்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை ஏகாதிபத்திய நாடுகள் தாக்குதல் மூலம் சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் முதல் சிரியாவின் அரசப் படைகளுடன் இணைந்து ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் அலெப்போ, ஹலப், இண்ட்லிப் மகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். அகதிகளாக அங்கிருந்து வெளியேறும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. அலெப்போ நகரம், ‘நரகத்தின் வட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. ஒருபக்கம் அமெரிக்க ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகள் தாக்குதல், மறுபக்கம் ரஷ்யப் படைகள் ஆதரவுடன் அரசப்படைகள் தாக்குதல் என அம்மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, சிரியாவில் நடைபெறும் இத்தகைய மனித படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கனடாவின் தீர்மானத்தின் மீது பல நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியா அதனை புறக்கணித்துள்ளது வருந்தத்தக்கதாக உள்ளது.

இதேபோல் அண்டை நாடான மியான்மரில், ரோகிங்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து அந்நாட்டு ராணுவம் மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. ஏற்கனவே, பெளத்த பயங்கரவாத குழுக்களின் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ரோகிங்யா மக்கள் மீதும், குடியிருப்புகள் மீதும், தற்போது ராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் மிகமோசமானது என செயற்கைகோள் படத்தை சுட்டிக்காட்டி ஐ.நா. சபை கூறியுள்ளதோடு, அங்கு மனித உரிமை மீறல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் படுகொலைகளை அரங்கேற்றும் பர்மிய ராணுவம், பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் ஏவி வருகின்றது. இதனை தடுக்க ஐ.நாவோ, அண்டை நாடுகளோ முன்வரவில்லை.

ஆகவே, சிரியா மற்றும் மியான்மர் நாடுகளில் நடைபெறும் மனித படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அண்டை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 20 கோடி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இந்திய அரசு, சிரியா மற்றும் மியான்மரில் நடைபெறும் மனித படுகொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

இதனைத் தொடர்ந்து யுனிசெப் அதிகாரிகளிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

14. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வாழ்த்து
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு;

அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றிருக்கும் திருமதி வி.கே.சசிகலா அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி வி.கே. சசிகலா அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெல்லியில் இருந்து கொண்டு சில வகுப்புவாத சக்திகள் அ.இ.அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் தமிழகத்தில் காலூன்றிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். சூது மதியாளர்களின் சூழ்ச்சியை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முறியடிப்பார் என நம்புகிறேன்.

மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் அ.இ.அ.தி.மு.க.வை மாபெரும் சக்தியாக உருவாக்கினார். அவரது வழியில் மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் கட்சியை மேலும் வலிமைப்படுத்தினார். அதை பின்தொடர்ந்து கட்சியை பாதுகாத்திடவும், மேலும் வலிமைப்படுத்தி சிறப்பாக செயல்படவும் திருமதி வி.கே.சசிகலா அவர்களை வாழ்த்துகிறேன்.

 

15. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் படுகொலை – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எம். நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் இன்று காரைக்கால் நிரவியில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிவக்குமார் அவர்களை படுகொலை செய்த கூலிப்படையினரை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான காரைக்காலில் இது போன்ற
ஆயுத கலாச்சாரம் தலை தூக்குவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்குமார் அவர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

16. விவசாயிகள் உயிரிழப்பை தடுத்து நிறுத்த வேண்டும்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்
மத்திய, மாநில அரசுகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு காரணமாகவும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு போதிய பருவமழை இல்லாமல் ஏற்பட்டுள்ள வறட்சி ஒருபுறம் காரணமாக இருந்தாலும், காவிரி மேலாண்மை விஷயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த துரோகம், கர்நாடக அரசின் வரட்டு பிடிவாதமும் காரணமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக மோடி அரசின் திட்டமிடாத பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் முக்கிய காரணமாகும்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட தவறான நடவடிக்கையின் காரணமாக கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி வந்த கூட்டுறவு சங்கங்களில் பணப்பரிவர்த்தனை இல்லாததால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விவசாயிகள் பயிர் செய்தனர். எனினும் பருமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியால் பயிர்கள் கருகின. வாங்கிய கடனை செலுத்த முடியாமல், மனுமுடைந்த விவசாயிகள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்க நேர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

முன்பு மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் தான் விவசாயிகள் மரணங்கள், தற்கொலைகள் அதிகளவில் நிழந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் அந்த அவலம் அதிகளவில் நிகழத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தற்கொலைக்கு சுமையே காரணமாகும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் 35 சதவீத அளவிற்கே பருவமழை பெய்துள்ளது. எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழையும் பொழியவில்லை. காவிரி நீரும் வரவில்லை. இதனால் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போய் இந்த ஆண்டும் சம்பாவும் முழுமையடையவில்லை.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகியன 35 சதவீத பருவமழை பொய்த்துப் போனதற்கே, தங்கள மாநிலங்களை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் 65 சதவீத மழை பொய்த்த நிலையிலும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஆகவே, தற்போதுள்ள சூழலில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கவேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் மரணம் தொடராத வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

எப்போதும் தமிழகத்தை வஞ்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு, இந்த இக்கட்டான நிலையிலாவது விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமடுத்து, தமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

17. புகாரி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு! – பாரபட்ச அரசியல் நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அதன்மூலம் நம் நாட்டுக்கு பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்ற நிறுவனமான, புகாரியா மற்றும் ஈ.டி.ஏ. குழுமங்களை குறிவைத்து, வருமான வரித் துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவைகள் குறித்து வெளிப்படையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது முதல், தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நபர்கள், தொழில் முன்னோடிகளை குறிவைத்து தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், சோதனை நடைபெற்ற இடங்களில் கைப்பற்றப்பட்டவை என்ன? அவர்கள் செய்த முறைகேடு என்ன? என்பது குறித்து மத்திய அரசு எதனையும் வெளிப்படுத்தவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அது குறித்து வெளிப்படையான தன்மையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தும் மத்திய அரசு மவுனமாகவே இருந்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் வருமான வரித்துறைக்கு சோதனை செய்யும் அதிகாரம் இருந்தாலும், தற்போதைய தமிழக அரசியல் சூழலில், தமிழகத்தை மட்டும் குறிவைத்து நடைபெறும் இத்தகைய சோதனை, அரசியல் காரணத்திற்காக நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

வருமான வரித்துறையின் நடவடிக்கை என்பது பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை குறிவைத்து வருமானவரி சோதனைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், கர்நாடகா மாநிலத்தில் 650 கோடி ரூபாய் செலவு செய்து தனது மகள் திருமணத்தை நடத்திய, பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதோ அல்லது பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் பாஜக ஆதரவு தொழில் அதிபர்கள் மீதோ, அக்கட்சி நிர்வாகிகள் மீதோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சோதனை செய்ய முன்வராத மத்திய அரசு, தமிழகத்தை மட்டுமே மையப்படுத்தி இது போன்ற சோதனைகளை நடத்துவது, அதன் பாரபட்ச போக்கை காட்டுவதோடு அப்பட்டமான அரசியலையும் வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், புகாரியா, ஈ.டி.ஏ. நிறுவனத்தினரின் வீடுகளில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வழக்கமான சோதனையை விடுத்து, அங்கிருந்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

18. வறட்சி நிவாரண இழப்பீடை அதிகரித்து வழங்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் போதிய பருவ மழை இல்லாததாலும், காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து விட்டதாலும், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளும் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், சம்பா சாகுபடி உள்ளிட்ட அனைத்து வித விவசாய தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. போதி நீரின்றி கருகிய பயிர்களால், ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மனவேதனையின் காரணமாக 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு மற்றும் தற்கொலைகள் மூலம் பலியாகியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவின் வறட்சி தொடர்பான அறிக்கையை தொடர்ந்து, தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.5,465 இழப்பீடு என்பது மிகக் குறைவானது. இது விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வரை பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், கடந்த 2 மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மனவேதனையால் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பில் தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகளுக்கு மட்டும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை ரூ.10 லட்சமாக வழங்குவதோடு, உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

19. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நேரில் வாழ்த்து!

தி.மு.கவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களை, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, தமிழகத்தில் இன்னும் வீரியத்தோடு எடுத்து செல்ல வேண்டிய தேவையை பகிர்ந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர், திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் உடல் நிலை குறித்தும் அப்போது நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த பல்வேறு செய்திகளை மு.க.ஸ்டாலின் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவருடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் எஸ்.அமீர் ஹம்சா, டி.ரத்தினம், மாநில ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

20. தேசநலனுக்கு எதிரான சர்வதேச அமைப்புகளை தடை செய்த மோடி அரசு பீட்டாவை தடை செய்யாதது ஏன்? – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் குறித்து எஸ்.டி.பி.ஐ. கேள்வி
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பன்னெடுங்காலமாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014 முதல் மத்திய பாஜக அரசின் அலட்சியம் மற்றும் கையாளாகத்தனத்தால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத நிலைக்கு, மத்திய பாஜக அரசு தக்க தருணத்தில் உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளது தான் முக்கிய காரணம்.

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விலங்குகள் நல வாரியம் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு அமைப்பான சர்வதேச பீட்டா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2011ல் ஜல்லிக்கட்டிற்கு தடை உத்தரவை பெற்றன. இந்த தடை உத்தரவுக்கு விலங்குகள் நல அமைப்பின் வேண்டுகோளை ஏற்று அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதிக்கும் பட்டியலில் சேர்த்ததையும் பீட்டா அமைப்பு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. ஆனாலும், அந்த தடைக்குப் பின்னரும் 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உரிய பாதுகாப்பு விதிகளுடன் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு, அதாவது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. அப்போது முதல் தடைகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும் என்று தமிழக பாஜக கூறிவந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளை தாண்டியும் பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததையே தற்போதைய நிலை வெளிக்காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு தடைக்கு விலங்குகள் நல வாரியமும், பீட்டா அமைப்பும் முக்கிய காரணமாக இருந்தாலும், இந்த விசயத்தில் மத்திய பாஜக அரசின் செயல்பாடும், அலட்சியப் போக்கும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தன்னுடைய இயலாமையை ஏற்று, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை என கைவிரித்து விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தன்னெழுச்சியாக பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற முடியாமல் போனதற்கு காரணம் பீட்டா அமைப்பு தான். அது ஒரு தேச விரோத அமைப்பு. அதனை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் ஊடகங்களில் பேசி, தங்களது பக்கம் எந்த தவறும் இல்லை என்பதை வெளிக்காட்ட முயன்று வருகின்றனர்.

பாரம்பரிய விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றை அழிப்பதற்காக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல் திட்டங்களை அமைத்து செயல்படுத்தும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. அதே வேளையில், இந்தியாவில் இந்த பீட்டா அமைப்பு செயல்பட கடந்த 2000 ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது என்பதையும், இந்த பீட்டா அமைப்பிற்கு பாஜகவின் மேனகா காந்தி தான் இந்தியாவில் பெரும் ஆதரவளித்து வருபவர் என்பதையும் தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மத்தியில் மோடி ஆட்சி அமைந்த நாள் முதல், தேச நலனுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு எதிராக போராடி வந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் உள்பட பல்வேறு அரசு சாரா தொண்6டு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர்கள் கூறிவரும் தேசவிரோத அமைப்பான பீட்டாவை ஏன் மத்திய மோடி அரசு தடை செய்யவில்லை? தமிழக பாஜக தலைவர்கள் தேச விரோத அமைப்பாக குற்றஞ்சாட்டும் பீட்டா அமைப்பின் செயல்பாடு மத்திய பாஜக அரசுக்கு தேச விரோத அமைப்பாக தெரியவில்லையா? ஏன் இந்த இரட்டை நிலை?

பீட்டா அமைப்புடன் இணைந்து ஜல்லிக்கட்டிற்கு தடை கோரிய விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் செயல்படும் ஒர் அமைப்புதான் என்கிற போது, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கையை எதிர்த்து உடனடியாக அதற்கு தடை கோரியதும், இதே விலங்குகள் நல வாரியம் அமைப்புதான். மத்திய அமைச்சகத்தின் ஒரு துறைக்கு கீழிருக்கும் ஓர் அமைப்பையே பாஜக அரசால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு கொண்டுவர ஏன் இயலவில்லை?

மத்தியில் பாஜக அரசு வீற்றிருக்கும் நிலையிலும், தமிழக பாஜகவுக்கு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசிடம் வலுவாக பேசும் துணிச்சல் இல்லை. பாஜகவில் செல்வாக்குடன் இருக்கும் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று கூறும் நிலையில், அதற்கு எதிராக பேசும் திராணியற்றவர்களாக தமிழக பாஜக தலைவர்கள் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே போய், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை, தமிழர்களை பொறுக்கிகள் என்று பேசிய சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட அவர்களால் பேச முடியவில்லை என்கிறபோது, தமிழக பாஜகவின் கூச்சல் வெறும் நாடகம் என்பது விளங்கும்.

ஜல்லிக்கட்டு விசயத்தில் பீட்டா அமைப்பு மட்டும் தான் காரணம் என தமிழக பாஜக தலைவர்கள் கூறிவந்தாலும், அக்கட்சியின் மத்திய தொடர்புகள் அனைத்தும் பீட்டாவுக்கு ஆதரவாகவே உள்ளன. ஆகவே, ஜல்லிக்கட்டு விசயத்தில் தனது இயலாமையை தமிழக மக்களிடம் இருந்து மறைப்பதற்காகவும், பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ள மக்களை சமாதானப்படுத்துவதற்காகவும் மட்டுமே தற்போது தமிழக பாஜக தலைவர்கள் பீட்டாவை எதிர்ப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், தமிழக மக்கள் இனியும் பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

21. அலங்காநால்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் அடக்குமுறை எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அலங்காநல்லூரில் தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக கைது செய்து வருகிறது. காவல்துறையின் இந்த அராஜக செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தங்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அமைதியான முறையில், 20 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் வகையில், அப்பகுதியை தனித்தீவாக்கி, உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுப் பூர்வமான உரிமைக்காக, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவர்களிடம் அதற்குரிய வாக்குறுதிகளை அளித்து செயல்படுவதை விடுத்து, அநீதியான முறையில் தடியடி நடத்தி கைது பிரயோகம் மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் இந்த போராட்டங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் மவுமனமாக இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக ரீதியில் போராடிவரும் அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடைபெற்றுவரும் அனைத்து போராட்டங்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவினை அளிக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

22. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
10 ஆண்டு ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்– தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்வரும் ஜனவரி 17 அன்று தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் அறிவிக்கப்பட இருக்கின்றன. அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு சார்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த சூழலில் தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைக்கைதிகள், தங்களுடைய தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைகளில் வாடி வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றன. சிறைக்கூடம் என்பது திருந்துவதற்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வதை செய்யும் இடமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர்களின் நூற்றாண்டு விழா, பிறந்தநாள் விழா காலக்கட்டங்களில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும். எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1992, 1993 மற்றும் 2011 ஆண்டுகளில் அதிமுக அரசால் 363 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேப்போன்று தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் 2007, 2008, 2009 மற்றும் 2010-ல் 1444 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ம் பிரிவை பயன்படுத்தியே தமிழக அரசு இவர்களை விடுதலை செய்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போதும் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் தமிழக அரசு நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் கூட அவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அந்த கோரிக்கைகள் தொடர் கனவாகவே இருந்து வருகிறது. ஆகவே, தமிழக அரசு அவர்களின் விடுதலைக் கோரிக்கையை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு போன்ற எந்த வழக்கோ அல்லது சட்ட சிக்கலோ ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலையில் தற்போது இல்லாததால், தமிழக அரசு பாரபட்சமின்றி அனைத்து தரப்பு நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

23. ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்! எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரம் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் கவுதமன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர்கள் மீது கண்மூடித்தனமாக போலீசார் தடியடி நடத்தி நடத்தி தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும், இயக்குநர் கவுதமனை தரதரவென இழுத்துச்சென்று கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக இயக்குநர் கவுதமன் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதேப்போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காவல்துறை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் அரசுக்கு உடன்பாடு இருக்கிறபோது, அதனை நடத்த வேண்டும் என்று போராடுபவர்கள் மீது காவல்துறை மூலம் அத்துமீறலை கட்டவிழ்த்து விடுவது ஏற்புடையதல்ல. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினாலோ அல்லது போராடினாலோ வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமே தவிர, கொடூர குற்றவாளிகளைப் போன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆகவே, இச்சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

24. போராட்டக்களத்தில் பின்லேடன் படம்! – முதல்வரின் பதில் காவல்துறை வன்முறையை நியாயப்படுத்தும் தந்திர நடவடிக்கை! – எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறையின் வன்முறை வெறியாட்டம் தொடர்பாக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள், அமைதியான முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை சமூக விரோதிகள் சிலர் திசை திருப்ப முயற்சித்தாகவும், ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
முதல்வர் குறிப்பிட்ட ஒசாமா பின்லேடன் படமுள்ள இரு சக்கர வாகனம், வன்முறை நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வெளியானது. அப்போது உடனடியாக காவல்துறை அது குறித்து விசாரிக்காமல், கடைசி நாளில் ஏற்பட்ட வன்முறைக்கு அது தான் காரணம் எனக் கூறுவது போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்த மேற்கொள்ளப்படும் தந்திர நடவடிக்கையாகவே தெரிகிறது. இந்த விசயத்தில் உளவுத்துறையை தன்வசம் வைத்துள்ள மாநில முதல்வர் தவறான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதாவது பின்லேடன் படம் இருந்த அந்த வாகனம் தங்களுடைய வேறு ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவருடையது. அது ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வில் நடந்தது அல்ல. இதற்காக அந்த நபர் தங்களால் கண்டிக்கப்பட்டார் எனவும் ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக, சமூக வலைதளத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதல்வர் சட்டப்பேரவையில் பதில் அளிப்பது கண்டனத்திற்குரியது. முதல்வரின் இந்த பதில் பாஜகவினரின் குற்றச்சாட்டுகளை அப்படியே வழிமொழிவது போல் உள்ளது.
சமூக விரோதிகள் சிலர் போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்ததாக கூறும் முதல்வர், தனக்கு கீழ் இருக்கும் காவல்துறையின் உளவுத்துறை முன்னரே அத்தகைய சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களை முடக்காமல் கோட்டை விட்டது ஏன்?
சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய காவல்துறை, ஒட்டுமொத்த போராட்டக்காரர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும் சமூக விரோதிகளைப் போன்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஏன்? பொதுச் சொத்துக்களை, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது ஏன்? சமூக விரோதிகள் எனக்கூறி பெண்களை, கர்ப்பிணிகளை, சிறுவர்களைக் கூட விட்டுவைக்காமல் தாக்கியது ஏன்?
ஒரு வார காலமாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடைசி நாளில் போராட்டக்காரர்கள் கோரிய குறைந்த பட்ச அவகாசத்தை கூட அளிக்காமல் காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஏன்? இந்த விவகாரத்தில் திருச்சி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை ஆணையர்கள் மேற்கொண்ட சுமூகமான நடவடிக்கையை, சென்னை, கோவை ஆணையர்கள் மேற்கொள்ளாதது ஏன்?
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற நிலையை விமர்சிக்கும் வகையில் முதல்வர் மற்றும் பிரதமரை விமர்சிப்பது சமூக விரோதமாகுமா? அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? லட்சக்கணக்கானோர் திரண்ட போராட்டத்தில் சிலர் வரம்பு மீறி வைத்திருந்த பதாகைகளால் ஒட்டுமொத்த போராட்டமும் சமூக விரோதிகளின் கையில் சிக்கிவிட்டது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமல்லாமல், காவிரி, முல்லை பெரியாறு போன்றவையும் பேசப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டதாக கூறும் முதல்வரின் பதில் அறிக்கையும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரின் குற்றச்சாட்டும் ஒன்றாகவே உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்த விவகாரம் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, காவிரி, முல்லை பெரியாறும் தமிழர் உரிமை சார்ந்த பிரச்சனை தான். இந்த விவகாரங்களை பேசுவதால், அது சமூக விரோதமாகிவிடும் என்பது ஏற்புடையதல்ல.
தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டக்களத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை விரும்பாத பாஜகவின் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் மதரீதியில் மக்களை பிளவுப்படுத்தும் வகையில், தொடர்ந்து இந்த போராட்டங்கள் குறித்து தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை முன்மொழியும் வகையில் தமிழக முதல்வரின் பதில்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் நெருக்கடி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

25. நேரில் ஆய்வு – பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறையினர் தடியடி மூலம் கலைத்ததால் சென்னை முழுவதும் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுகுப்பம், நொச்சிகுப்பம், ரூதர்புரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் தன்னெழுச்சி மிகுந்த போராட்டம் உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டது. மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்பகுதி மக்களிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கேட்கும் போது அவர்கள் கூறியதாவது:-
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தோம் என்ற காரணத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களின் மீது காவல்துறையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள மீன் மார்கெட், கடைகள், வாகனங்களை காவல்துறையினரே எரித்துள்ளனர் என்றும், மாணவர்களின் கட்டுப்பாடு மிகுந்த, நாகரீகமான அமைதி வழிப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு காவல்துறையினர் செயல்பட்டுள்ளதாகவும், ரூதர்புரம், ரோட்டரி நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர் என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வைக்கக் கூடிய கோரிக்கை என்னவென்றால் பாதிக்கப்பட்டுள்ள நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், ரூதர்புரம், கிருஷ்ணாம்பேட்டை பகுதி மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இப்பகுதிகளில் தொடர்ந்து சுமூக நிலை உருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கலவரம் ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடுகுப்பம் பகுதியில் மீன் மார்கெட் கட்டித்தரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உடன் கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில பொருளாளர் முகைதீன், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முகமது ஃபாரூக், வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் கலீல் ரஹ்மான், வழக்கறிஞர் அணி சென்னை மாவட்ட செயலாளர் சேக் முகமது அலி, மாவட்ட இணை செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

 

26. நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க உறுதி மேற்கொள்வோம்! #SDPI கட்சி மாநில தலைவரின் #குடியரசு_தின #வாழ்த்துச்_செய்தி!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நாட்டின் 68-வது குடியரசு தின விழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் நமது நாட்டின் அரசியல் சாசன சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை வலிமைப்படுத்த நாம் உறுதியேற்போம்.
இந்நாட்டின் வளங்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கவும், சமூக நீதி தளைக்கவும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நாம் பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்தார்.

#HappyRepublicDay #India #JaiHind #RepublicDay2017