அதிகாரம் 01
பெயர் : சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
அதிகாரம் 02
இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசமானது.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்ட, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டதாகவும்; சோசியலிஷம், மதசார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை பற்றுறுதியுடன்; இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் அமைப்பாக விளங்கும்.

அதிகாரம் 03
நோக்கங்களும் லட்சியங்களும்.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒளிர்கின்ற மேன்மை வாய்ந்த லட்சியங்களான நீதி, சுதந்திரம், பண்பாடு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு மற்றும் அரசியல் முறை ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எழுந்து நிற்கும். தேர்தல் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்கள் மூலம் மனித உரிமைகளை அனுபவிக்க மக்களை அது திரட்டும்.

இந்தியாவில் எல்லா மக்களும் எல்லா சமூகத்தினருமான உரிமைகளை பெரும் வகையில், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளுமையை ஏற்படுத்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பாடுபடும். அது எல்லா ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரையும் ஒரு தேசிய அரசியல் இயக்கத்தில் இணைக்க பாடுபடும்.

கீழகண்ட லட்சியங்களை கொண்ட அரசியல் தத்துவத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி தாங்கி பிடிக்கும்:

தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை
சமூகத்தையும், அரசியலையும் ஜனநாயக ரீதியாக்கல்
சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள்
பசி மற்றும் பயத்திலிருந்து விடுதலை
சுற்றுச்சூழல் மற்றும் அழிவு அல்லாத வளர்ச்சி மாதிரி
பலவீனப்பட்டவர்களின் நலன் மற்றும் முன்னேற்றம்
ஒதுக்கப்பட்ட சமூகத்தினரின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு
பழங்குடி, தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளங்கள்
சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரமளித்தல்
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு

அதிகாரம் 04
உறுப்பினர் அமைப்பு:

இரட்டை அடுக்கு உறுப்பினர் முறையை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கொண்டிருக்கும்:
செயல்வீரர் (Party Cadre) மற்றும் கட்சி உறுப்பினர் (Party Member)

கட்சி செயல்வீரர்:

கட்சியில் ஒரு ஆண்டு உறுப்பினர் அமைப்பை பூர்த்தி செய்த எந்த உறுப்பினரும், செயல்வீரராக பதிவு செய்ய தகுதியானவர்கள் ஆவார்கள். ஆனால் அவன்/அவள் அவ்வப்போது கட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கட்சியின் செயல்வீரராவதற்கு, கட்சியின் உறுப்பினரால் கிளை கமிட்டியில் சமர்பிக்கப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில், அந்த விண்ணப்பம் மாவட்ட தலைவர்/ மாநில தலைவர்/ தேசிய தலைவரால் அங்கீகாரம் பெறப்பட்டு கட்சி செயல்வீரர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.

(இந்த சட்டத்திட்ட விதிகளோடு இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ஐ பார்க்கவும்)

ஒரு விண்ணப்பதாரர் கட்சியின் செயல்வீரராக அனுமதிக்கப்பட்டால், அவன்/அவள் கட்சியின் தலைவரால் அனுமதிக்கப்பட்ட கட்சி பிரதிநிதி முன்னிலையில், வகுக்கப்பட்டிருக்கும் உறுதிமொழியை ஏற்பதோடு ஆண்டு சந்தாவையும் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்சி தொண்டரும், குறிப்பிட்ட பருவத்தில் (காலத்தில்), அதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்தில், தனது உறுப்பினர் பதிவை, அதற்கான சந்தாவைச் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

கட்சி உறுப்பினர்:

16 வயதை அடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும் இக்கட்சியில் இணைய விரும்பினால், அவர்கள் கட்சி உறுப்பினர் ஆகலாம். மதம், ஜாதி, சமூகம் மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் யாரும் கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அவ்வப்போது உறுப்பினர்களுக்காக கட்சி வகுக்கும் சட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அவர்கள் சம்பதிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு உறுப்பினருக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையோ அல்லது நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையோ அல்லது கட்சியின் ஏதாவது ஒரு தீர்மானத்தின் மீது வாக்களிக்கவோ உரிமை கிடையாது.

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், குறிப்பிட்ட பருவத்தில் (காலத்தில்), அதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்தில், தனது உறுப்பினர் பதிவை, அதற்கான சந்தாவைச் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

(இந்த சட்டத்திட்ட விதிகளோடு இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ஐ பார்க்கவும்)

அதிகாரம் 05
அதிகார வரம்பு

இந்தியா முழுவதும் கட்சிக்கு அதிகார வரம்பு உள்ளது.

அதிகாரம் 06
உறுதிமொழி

நான் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் சமூக உரிமைகள் மற்றும் சமூக நீதிகள் ஆகியவற்றில் பூரணத்துவம் பெற நான் பாடுபட தயாராக இருப்பேன். நான், கட்சியின் சட்டத்திட்ட விதிகளுக்கும், ஒழுங்கிற்கும் கட்டுப்படுவேன். பொது மக்களின் நன்மைகளுக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும்; நான் தனிப்பட்ட முறையில் சொந்த தீய பழக்கங்கள் மற்றும் சமூக தீமைகளில் இருந்து விலகி இருப்பேன் என்றும் இப்போது உறுதிமொழி ஏற்கிறேன்.

அதிகாரம் 07
ஆவணங்கள்
கட்சியின் கிளைகள் கீழ்கண்ட ஆவணங்களால் பராமரிக்கப்பட வேண்டும்.

1. கட்சியின் சட்டத்திட்ட விதிகள்
2. உறுப்பினர்களின் பதிவேடு
3. கிளை கமிட்டிகளின் நிகழ்ச்சி நிரல் குறிப்பு
4. கிளை கமிட்டியின் கணக்குகள்

கிளை கமிட்டிக்கு மேற்பட்ட, கட்சியின் தேசிய செயல் கமிட்டி வரை கீழ்கண்ட ஆவணங்களால் பராமரிக்க வேண்டும்

1. கட்சியின் சட்டத்திட்ட விதிகள்
2. அனைத்து கமிட்டி தொடர்பான கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள்
3. அனைத்து கமிட்டிகளின் கணக்குகள்

அதிகாரம் 08
கட்டமைப்பு
1. தேசிய செயற்குழு:

தேசிய செயற்குழுதான், கட்சியின் உட்ச நிலை முடிவெடுக்கும் அமைப்பாகும். கட்சியின் தேசிய செயலகம் உள்ளிட்ட கட்சியின் கீழ்மட்ட கமிட்டி எடுக்கும் எந்த முடிவையும் ரத்து செய்ய தேசிய செயற்குழுக்கு அதிகாரம் இருக்கிறது.

தேசிய பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்சம் 15 உறுப்பினர்களையும், அதிகபட்சம் 51 உறுப்பினர்களுக்கு மிகாமலும், தேசிய செயற்குழு அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும்.

மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இல்லாத பட்சத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினராக இருப்பார்கள். அலுவல் சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழுவானது, தேசிய செயற்குழுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களிடம் இருந்து, தனக்கு கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்துகொள்ளும். அப்படி நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது, தேசிய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒரு தடவை தேசிய செயற்குழு கூட வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு உறுப்பினர்கள் விரும்பினால் ஒரு மாதத்திற்குள் தேசிய செயற்குழுவைக் கூட்டலாம்.

தேசிய செயற்குழுவின் பிரதானப் பணிகள்

1. கட்சியின் கொள்கை பற்றி விவாதித்து முடிவெடுப்பது.
2. கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தம் செய்வது, மேலும் கட்சியின் செயல் திட்டங்களை வகுப்பது.
3. தேசிய செயலகத்தை தேர்ந்தெடுப்பது.
4. கட்சியின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது.
5. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது.
6. கட்சியின் லட்சியம் தொடர்பான கொள்கைகளை கையாளுவது.

2. தேசிய செயலகக் குழு

கட்சியின் தேசிய செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து, குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் அதிகபட்சம் 15 உறுப்பினர்கள் கட்சியின் தேசிய செயலகக் குழுவிற்கு அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் கட்சியின் தலைமையை நிர்வகிக்கக்கூடிய தேசிய தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர்களும் உள்ளடங்குவர்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயலகக் குழுவானது, தேசிய செயற்குழு உறுப்பினர்களிடம் இருந்து தனக்கு கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்துகொள்ளும். அப்படி நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது, தேசிய செயலக குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தேசிய செயலகக் குழு குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை கூடவேண்டும்.

தேசிய செயலகக் குழுவின் முக்கிய செயல்பாடுகள்

1. கட்சி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது.
2. கட்சியின் நிதி மற்றும் கணக்குகளை மேற்பார்வையிடுவது.
3. கட்சியின் தேர்தல் கொள்கையை முறைப்படுத்துவது.
4. கட்சியின் செயல் திட்டத்தை முறைப்படுத்தி, பிரச்சினைகளை அடையாளம் கண்டு தகுந்த முறையில் செயலாற்றுவது.
5. மாநில அமைப்புகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவது.
6. கட்சியின் இலகுவான செயற்பாட்டிற்கு, தேசிய அளவிலான துணை குழுக்களை அமைத்து, அவற்றை மேற்பார்வையிடுவது.

3. தேசிய பொதுக்குழு

அலுவல் சார்ந்த உறுப்பினர்களை தவிர்த்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்களைத் தவிர்த்த மாநில செயற்குழு உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால், அவ்வப்போது உருவாக்கப்படும் கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு, தேசிய பொதுக்குழு அமைக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் தேசிய பொதுக்குழுவுக்கு, மாநில பொதுக்குழு தான் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடி, தேசத்திலும், கட்சியிலும் உள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

கட்சியின் மூன்றாண்டு ஆய்வு அறிக்கையை, தேசிய செயற்குழு, தேசிய பொதுக்குழுவுக்கு அளித்து, அதனை விவாதத்துக்கும், ஆலோசனைகளுக்கும் உட்படுத்தும்.

கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் கொண்டு வரப்படும் எந்த ஒரு திருத்தத்தையும், தேசிய பொதுக்குழு, தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வாக்கெடுப்பு மூலம் (வாக்களிக்கும் நேரத்தில் அந்த குழுவில் இருக்கும் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன்) ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.

4. மாநில செயற்குழு

மாநில செயற்குழு, மாநில பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். குறைந்தபட்சம் 9 அதிகபட்சம் 33 க்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்டு, 3 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் உருவாக்கப்படும்.
மாவட்ட தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தால், அவர்கள் அலுவல் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத அலுவல் சார்ந்தவர்களாக இருப்பின் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு, மாநில செயற்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களை கூடுதலாக நியமனம் செய்யலாம். ஆனால், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாநில அளவிலான கட்சியின் முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்பாக மாநில செயற்குழு செயல்படும்.

மாநில செயற்குழு, மூன்று மாததத்துக்கு ஒரு முறை கூட வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால், அவர்கள் வழங்கும் அறிக்கைக்கு 15 நாட்களில் செயற்குழு கூடும்.

மாநில செயலகக் குழுவின் எந்த முடிவையும் ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் மாநில செயற்குழுவுக்கு உண்டு.

5. மாநில செயலகக்குழு

மாநில அலுவலக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட, குறைந்தபட்சம் 5 அதிகபட்சம் 9 உறுப்பினர்களுக்கு மிகாத உறுப்பினர்களை செயற்குழு தங்களுக்குள்ளேயே தேர்ந்தெடுத்து, மாநில செயலகக்குழு உருவாக்கப்படும். கட்சியின் வழக்கமான பணிகளை கவனிப்பதற்காக மாநில செயலகக்குழு நியமிக்கப்படுகிறது. மாநில செயலகக் குழு ஒவ்வொரு மாதமும் கூட வேண்டும்.

6. மாநில பொதுக்குழு

அலுவல் சார்ந்த உறுப்பினர்களை தவிர்த்த மாநில செயற்குழு உறுப்பினர்களாலும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களை தவிர்த்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாலும், மேலும் செயல்வீரர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும், மாநில பொதுக்குழு அமைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் செயல்படும்.

மாநில பொதுக் குழுவுக்கு, மாவட்ட பொதுக்குழு தான் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாநில பொதுக்குழு தனது கால வரையறையில் (மூன்று ஆண்டுகளுக்கு) இரு முறை கூடி, தங்களது மாநிலத்திலும், கட்சியிலும் உள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

கட்சியின் மூன்றாண்டு ஆய்வு அறிக்கையை, மாநில செயற்குழு, மாநில பொதுக்குழுவுக்கு அளித்து, அதனை விவாதத்துக்கும், ஆலோசனைகளுக்கும் உட்படுத்தும்.

7. மாவட்ட செயற்குழுக்கள்

மாவட்ட பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்சம் 7 அதிகபட்சம் 21 உறுப்பினர்களை மிகாமல், 3 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் மாவட்ட செயற்குழுக்கள் அமைக்கப்படுகிறது. தொகுதி கமிட்டி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இல்லாவிட்டால் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள். அலுவல் சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயற்குழு, மாவட்ட செயற் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களை கூடுதலாக நியமனம் செய்யலாம். ஆனால், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாவட்ட அளவிலான கட்சியின் முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்பாக மாநில செயற்குழு செயல்படும்.

மாவட்ட செயற்குழு, மாதம் ஒரு முறை கூட வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால், அவர்கள் வழங்கும் அறிக்கைக்கு 15 நாட்களுக்குள் செயற்குழுவை கூட்ட வேண்டும்.

மாவட்ட செயலகம் எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் மாவட்ட செயற்குழுவுக்கு உண்டு.

8. மாவட்ட செயலகக்குழு

மாவட்ட செயற்குழு தன் உறுப்பினர்களிடம் இருந்து, மாவட்ட தலைவர் மற்றும் பொதுச் செயலாளரோடு சேர்த்து 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட செயலகம் அமைக்கப்படுகிறது. கட்சியின் வழக்கமான பணிகளை கவனிக்கும் வகையில், மாவட்ட செயற்குழுவின் துணைக் குழுவாக மாவட்ட செயலகம் நியமிக்கப்படுகிறது. மாவட்ட செயலகம் குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் ஒரு தடவையாவது கூட வேண்டும்.

9. மாவட்ட பொதுக்குழு

அலுவல் சார்ந்த உறுப்பினர்களைத் தவிர்த்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாலும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களைத் தவிர்த்த தொகுதி கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும், கட்சியால் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட விகிதப்படி கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும் மற்றும் நியமன உறுப்பினர்களாலும் மாவட்ட பொதுக்குழு, 3 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

மாவட்ட பொதுக்குழுவுக்கு, தொகுதி கமிட்டி தான் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏதாவது மாவட்டத்தில் தொகுதி மட்ட அமைப்பு இல்லாத பட்சத்தில், கட்சி கட்டமைப்பின் அடுத்த கீழ்மட்ட அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதை உருவாக்குவார்கள். மாவட்ட பொதுக்குழு ஆண்டில் ஒரு தடவை கூட வேண்டும். மாவட்டத்தின் கட்சி நிலையை அது ஆய்வு செய்யும்.

10. தொகுதி கமிட்டி

தொகுதி கமிட்டி, தொகுதி கவுன்சிலால் குறைந்தது 7 மேலும் 12 உறுப்பினர்களுக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டு, 3 ஆண்டு காலத்துக்கு செயல்படும். பஞ்சாயத்து, நகர்மன்றம், நகர கமிட்டிகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் அலுவல் சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அலுவல் சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை கிடையாது.

11. தொகுதி கவுன்சில்

அலுவல் சார்ந்த உறுப்பினர்களைத் தவிர்த்து, தொகுதி கவுன்சில் உறுப்பினர்களாலும், அலுவல் சார்ந்தவர்களை தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து, நகர்மன்ற, நகர கமிட்டிகளின் உறுப்பினர்களாலும் மற்றும் அவ்வப்போது உள்ள கட்சி நிலவரப்படியான செயல்வீரர்களின் விகிதாச்சாரத்துக்கு தக்கப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும், 3 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் தொகுதி கவுன்சில் உருவாக்கப்படும்.

தொகுதி கவுன்சிலுக்கு பஞ்சாயத்து, நகர்மன்ற, நகர கமிட்டிதான் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏதாவது மாவட்டத்தில் பஞ்சாயத்து, நகர்மன்ற, நகர்மட்ட அமைப்பு இல்லாவிட்டால், கட்சியில் அடுத்த கீழ்மட்ட அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தொகுதி கவுன்சில் அமைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை கூடி, அத்தொகுதியில் உள்ள கட்சி நிலவரம் குறித்து அது ஆய்வு செய்யும்.

12. பஞ்சாயத்து / நகர்மன்ற / நகர கமிட்டிகள்

பஞ்சாயத்து / நகர்மன்ற / நகர கமிட்டிகள் குறைந்தது 5 அதிகபட்சம் 17 உறுப்பினர்களுக்கு மிகாமல், பஞ்சாயத்து / நகர்மன்ற / நகர கவுன்சில்களால் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் செயல்படும். கிளை கமிட்டி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் அலுவல் சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அலுவல் சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை கிடையாது.

13. பஞ்சாயத்து / நகர் மன்ற / நகர கவுன்சில்கள்

அலுவல் சார்ந்த உறுப்பினர்களை தவிர்த்த பஞ்சாயத்து / நகர் மன்ற / நகர கமிட்டி உறுப்பினர்களைத் தவிர்த்த கிளை கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும், மேலும் நியமன உறுப்பினர்கள் மற்றும் அவ்வப்போது உள்ள கால நிலவரத்துக்கு தக்கப்படி உள்ள கட்சி செயல்வீரர்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்களாலும், பஞ்சாயத்து / நகர் மன்ற / நகர கவுன்சில் 3 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.

அந்தந்த பஞ்சாயத்து, நகர் மன்றம், நகர உறுப்பினர்களின் ஆளுமைக்கு உள்பட்ட ஒவ்வொரு கிளையின் கட்சி செயல்வீரர்கள் பஞ்சாயத்து / நகர் மன்ற / நகர கவுன்சில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பஞ்சாயத்து / நகர் மன்றம்/ நகர கவுன்சில்கள் ஆண்டுக்கு ஒரு தடவை கூட வேண்டும். பஞ்சாயத்து/ நகர் மன்றம்/ நகர கவுன்சில்கள் அப்பகுதி கட்சியின் நிலவரம் குறித்து அப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

14. கிளை கமிட்டிகள்

ஒவ்வொரு கட்சி கிளையின் செயல்வீரர்கள் தேர்ந்தெடுக்கும் நிர்வாகிகள், கிளை கமிட்டியை மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் உருவாக்குவார்கள் ஒவ்வொரு மாதமும் கிளை கமிட்டி கூடும்.

15. கிளை

ஐந்துக்கு குறையாமலும், 25க்கு மிகாத கட்சி செயல்வீரர்கள், கட்சி கிளையை உருவாக்குவார்கள். அந்த கிளையில் ஆளுகைக்கு உள்பட்ட உறுப்பினர்கள் ஒவ்வொரு கிளையின் பகுதியாக இருப்பார்கள். 2 மாதத்துக்கு ஒரு தடவை கிளை கூட வேண்டும்.

16.ஒவ்வொரு மட்டத்தின் காரிய (செயல்) கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை, குறிப்பிட்ட காலத்துக்கு, அதற்கு மேல்மட்ட கமிட்டி நிர்ணயம் செய்யும். ஆனால், தேசிய காரிய (செயல்) கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேசிய செயற் குழு நிர்ணயம் செய்யும்.

அதிகாரம் 9
அலுவலக நிர்வாகிகள்

கிளைகள் தவிர்த்து அனைத்து மட்ட கட்சி நிர்வாகிகளையும் காரிய கமிட்டி அல்லது கமிட்டி உறுப்பினர்களின் அந்தந்த மட்டத்தில் தேர்ந்தெடுத்து கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். கிளையின் செயல்வீரர்கள் அந்தந்த கிளையின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். எல்லா மட்டத்திலும் தேர்தலில் இரகசிய வாக்கெடுப்பு முறையை கடைபிடிக்க வேண்டும்.

I. தேசிய நிர்வாகிகள்
தேசிய செயற்குழு, கீழ்கண்ட அலுவலக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. தேசிய தலைவர்.
2. தேசிய துணைத் தலைவர்கள் (3 பேர்களுக்கு மிகாமல்)
3. தேசிய பொதுச் செயலாளர்கள் (5 பேர்களுக்கு மிகாமல்)
4. தேசிய செயலாளர்கள் (10 பேர்களுக்கு மிகாமல்)
5. தேசிய பொருளாளர்.

II. மாநில நிர்வாகிகள்
மாநில செயற்குழு, கீழ்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. மாநில தலைவர்
2. மாநில துணைத் தலைவர்கள் (3 பேருக்கு மிகாமல்)
3. மாநில பொதுச் செயலாளர்கள் (3 பேருக்கு மிகாமல்)
4. மாநில செயலாளர்கள் (6 பேர்களுக்கு மிகாமல்)
5. மாநில பொருளாளர்

III. மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட செயற்குழு கீழ்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. மாவட்ட தலைவர்
2. மாவட்ட துணைத் தலைவர் (3 பேருக்கு மிகாமல்)
3. மாவட்ட பொதுச் செயலாளர்
4. மாவட்ட செயலாளர்கள் (6 பேருக்கு மிகாமல்)
5. மாவட்ட பொருளாளர்

IV. தொகுதி நிர்வாகிகள்
தொகுதி கமிட்டி கீழ்கண்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும்

1. தொகுதி தலைவர்
2. தொகுதி துணைத் தலைவர்கள் (2 பேருக்கு மிகாமல்)
3. தொகுதி செயலாளர்
4. தொகுதி இணைச் செயலாளர்கள் (3 பேருக்கு மிகாமல்)
5. தொகுதி பொருளாளர்

V. பஞ்சாயத்து / நகர்மன்ற / நகர நிர்வாகிகள்
பஞ்சாயத்து / நகர் மன்ற / நகர கமிட்டிகள் கீழ்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும்

1. பஞ்சாயத்து/நகர் மன்றம்/நகர தலைவர்
2. பஞ்சாயத்து/நகர் மன்றம்/நகர துணைத் தலைவர்கள் (2 பேருக்கு மிகாமல்)
3. பஞ்சாயத்து/நகர் மன்றம்/நகர செயலாளர்
4. பஞ்சாயத்து/நகர் மன்றம்/நகர இணை செயலாளர் (3 பேருக்கு மிகாமல்)
5. பஞ்சாயத்து/நகர் மன்றம்/நகர பொருளாளர்

VI. கிளை நிர்வாகிகள்
கீழ்கண்ட நிர்வாகிகளை கிளை கமிட்டி தேர்ந்தெடுக்கும்

1. கிளை தலைவர்
2. கிளை துணைத் தலைவர்
3. கிளை இணை செயலாளர் (3 பேருக்கு மிகாமல்)
4. கிளை பொருளாளர்

ஆனால், குறைந்தபட்ச உறுப்பினர்களை கொண்ட கிளைக்கு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய 3 நிர்வாகிகள் மட்டும் இருப்பர்.

அதிகாரம் 10

நிர்வாகிகளின் அதிகாரங்களும், பணிகளும்

தலைவர்

1. கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களும், கட்சியின் பணிகளை மேற்பார்வையிடுவார்கள்.
2. கட்சியின் அந்தந்த மட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அவர் பொறுப்பு.

துணைத் தலைவர்

1. கட்சி கட்டமைப்பில் அந்த அந்த மட்டத்தில் துணைத் தலைவர்கள், தலைவருக்கு உதவி செய்ய வேண்டும். மேலும், தலைவரால் அவருக்கு கொடுக்கப்படும் பணியை நிறைவேற்றுவதும் அவரது பொறுப்பாகும்.
2. கட்சியின் வழக்கமான பணிகளில் தலைவர் இல்லாதிருந்தால், தலைவர் ஒரு துணைத் தலைவரை அந்த பொறுப்புக்கு நியமிக்கலாம்.

பொதுச் செயலாளர்

1. கட்சியின் அனைத்து மட்டத்திலும், தலைவருடைய மேற்பார்வையின் கீழ், பொதுச் செயலாளர், கட்சியின் பொது நிர்வாகத்தை கவனிப்பார்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட பொதுச் செயலாளர் இருந்தால், சம்பந்தப்பட்ட காரிய கமிட்டி அவர்களுக்கு பணிகளை பிரித்து கொடுக்க வேண்டும்.

செயலாளர்கள்

1. பொதுச் செயலாளருக்கு செயலாளர் உதவிகரமாக இருப்பார்.
2. கட்சியின் குறிப்பிட்ட மட்டத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கு விதிமுறைகள் இல்லாவிட்டால், செயலாளர் அந்த மட்டத்தில் பொதுச் செயலாளரின் அதிகாரத்துக்கும், பணிகளுக்கும் பொறுப்பு ஏற்பார்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட செயலாளர்கள் இருந்தால், அவர்களுக்கு காரிய கமிட்டி அவர்களுக்கு பணிகளை பகிர்ந்தளிக்க முடிவு மேற்கொள்ளப்படும்.

இணை செயலாளர்கள்

1. இணை செயலாளர், செயலாளருக்கு உதவி செய்ய வேண்டும்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட இணைச் செயலாளர்கள் இருந்தால், தொடர்புடைய கமிட்டி அவர்களுக்கு பணிகளைப் பகிர்ந்தளிக்க முடிவு எடுக்கும்.

பொருளாளர்

கட்சியின் கட்டமைப்பு வரிசையில், எல்லா மட்டங்களிலும் பொருளாளர் கட்சியின் வருமானம், செலவு மற்றும் அவற்றிற்கான கணக்குகளை, பொதுச் செயலாளர் அல்லது பொதுச் செயலாளருக்கான விதி நடைமுறையில் இல்லாவிட்டால் செயலாளரின் மேற்பார்வையில் நிர்வாகம் செய்வார்.

அதிகாரம் 11

கூட்டத்துக்கான கோரம் (குறைந்தபட்ச எண்ணிக்கை)

எல்லா கமிட்டிகள் மற்றும் கவுன்சில்களின் கூட்டம் நடைபெற, அந்தந்த கமிட்டிகள் மற்றும் கவுன்சில்களின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் கோரம் (குறைந்தபட்ச எண்ணிக்கை) தேவை. ஒரு கமிட்டி அல்லது கவுன்சில் கூட்டம் கோரமில்லாமல் நடக்காமல் போனால், அந்த கமிட்டி அல்லது கவுன்சிலின் அடுத்த கூட்டத்துக்கு கோரம் தேவை இல்லை.

அதிகாரம் 12
கட்சி நிதி
கட்சியின் வருமான அடிப்படை கீழ்கண்டவாறு:

1. கட்சி செயல்வீரர்கள் அல்லது உறுப்பினர்களின் சந்தா பணம்
2. பொது மக்களிடம் இருந்து நன்கொடை

கட்சியின் தேசிய மட்டத்தை தவிர, கட்சியின் எந்த மட்டத்திலும் வசூலாகும் அனைத்து நிதியையும், மாநில செயற்குழுவிடம் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில செயற்குழுவும், நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களின் ஆண்டு வருமானத்தில் இருந்து தேசிய செயற்குழுவுக்கு செலுத்த வேண்டும்.

கட்சியில் தேசிய மட்டத்துக்கு கீழ் உள்ள அனைத்து மட்ட கட்சி அமைப்புகளும், அந்த அமைப்புக்கு மேல் உள்ள அமைப்பால் அமைக்கப்படும் ஆடிட்டர்களால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

அதிகாரம் 13
கட்சி ஒழுக்க-கட்டுப்பாடு

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நல்லொழுக்க மதிப்புகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் எல்லாவித தீய பழக்கங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். கட்சி கட்டுப்பாட்டை மிகுதியாக மீறும் குற்றச்சாட்டு ஒரு செயல்வீரர் மீது சுமத்தப்படும் போது, அதற்காக தயாரிக்கப்படும் துணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குதல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையை மாநில தலைவர் எடுப்பார்.

மாநில அளவுக்கு கீழ் உள்ள ஒரு தலைவர் ஒரு உறுப்பினரின் மீது, 3 மாத தற்காலிக இடைநீக்கம் செய்யலாம். மேலும், அந்த காலக்கெடு முடியும் முன் அது தொடர்பான இறுதி முடிவை மாநில தலைவர் எடுப்பார்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் ஒரு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினராகவோ அல்லது தேசிய செயற்குழு உறுப்பினர்களாகவோ இருந்தால் அந்த விவகாரம் குறித்த இறுதி முடிவை தேசிய செயலகக் குழு எடுக்கும்.

மாவட்ட அளவுக்கு கீழ் உள்ள ஒரு உறுப்பினரை, தலைவர் 3 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யலாம். மேலும், அந்த கெடு முடிவதற்குள், அந்த விவகாரம் மாவட்ட தலைவரால் இறுதி முடிவுக்கு உள்படுத்தப்படும்.

நிர்வாகியாக இல்லாத ஒரு உறுப்பினரின் ராஜினாமா கிளைத் தலைவரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். மேலும், அதன் மீது இறுதி முடிவு மாவட்ட தலைவரால் எடுக்கப்பட வேண்டும்.

கிளை மட்டத்துக்கு மேலும் மாநில அளவுக்கு கீழும் ஒரு கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் தனது ராஜினாமாவை, தொடர்புடைய கமிட்டி தலைவரிடம் சமர்பிக்க வேண்டும். மேலும் அந்த விவகாரம் மாவட்ட தலைவரிடம் இறுதி முடிவுக்கு விடப்பட வேண்டும்.

மாநில செயற்குழுவிலோ அல்லது தேசிய செயற்குழுவிலோ உறுப்பினராக இருக்கும் ஒருவரின் ராஜினாமா, தொடர்புடைய தலைவரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். மேலும், அந்த விவகாரம் தொடர்புடைய குழுவால் (கமிட்டி) இறுதி முடிவு செய்யப்பட வேண்டும்.

மாநில மட்டத்துக்கு கீழே உள்ள ஒரு கமிட்டி/கவுன்சிலை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யவும் (சஸ்பெண்ட்), செயல்களை முடக்கவும் அல்லது கலைக்கவும் மாநில செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநில செயற்குழு, மாநில செயலகக்குழு அல்லது மாநில பொதுக்குழு ஆகியவற்றை தற்காலிகமாக நீக்கி வைக்கவும், முடக்கவும், அல்லது கலைக்கவும் தேசிய செயற்குழுவுக்கு உரிமை உண்டு.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
அதிகாரம் 13 எ

a. கட்சி உறுப்பினர்கள், செயல்வீரர்கள், கமிட்டிகள் மற்றும் தலைவர்கள் நல்லொழுக்க மதிப்புகளைப் பேண வேண்டும். மேலும் எல்லாவித தீய பழக்கங்களையும் விலக்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் கட்சி கட்டுப்பாடு, விதிகள் மற்றும் நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். எந்த விதமான கட்டுப்பாட்டு மீறல்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

b. உறுப்பினர்கள், செயல்வீரர்கள், கமிட்டிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக, ஒரு ஒழுங்கு நடவடிக்கை விதிகளை தேசிய செயற்குழு பராமரிக்க வேண்டும்.

c. ஒழுங்கு நடவடிக்கை விதிகளை திருத்தும் அதிகாரம் தேசிய செயற்குழுவுக்கு உள்ளது.

அதிகாரம் 13 பி

நிர்வாகி அல்லாத ஒரு தொண்டரின் ராஜினாமா கிளைத் தலைவரிடம் வழங்கப்பட வேண்டும். மேலும் அதன் மீதான இறுதி முடிவு, மாவட்ட தலைவரால் எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட செயல்வீரர், கிளை நிலையிலான கமிட்டிக்கு மேலோ அல்லது மாநில அளவிலான கமிட்டிக்கு கீழோ உள்ள குழுவில் உறுப்பினராக இருந்தால் அவரது அல்லது அவளது செயல்வீரர் அல்லது நிர்வாகி ராஜினாமாவை, சம்பந்தப்பட்ட கமிட்டி தலைவரிடம் சமர்பிக்க வேண்டும். மேலும், அதன் மீது கமிட்டி தலைவர் இறுதி முடிவை எடுக்க வேண்டும். ராஜினாமா செய்பவர் மாநில செயற்குழுவிலோ அல்லது தேசிய செயற்குழுவிலோ உறுப்பினராக இருந்தால், அவர் தன் ராஜினாமாவை தொடர்புடைய குழு தலைவரிடம் சமர்பிக்க வேண்டும். அதன் மீது சம்பந்தப்பட்ட குழு தலைவர் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

அத்தியாயம் 14
மேல் முறையீடு

எல்லாவித ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்ய உரிமை உண்டு.

அத்தியாயம் 15
திருத்தங்கள்

கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தம் செய்யும் உரிமை தேசிய செயற்குழுவுக்கு உள்ளது. எனினும், கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் கொண்டு வரப்படும் எந்த ஒரு திருத்தத்தையும், தேசிய பொதுக்குழு, தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வாக்கெடுப்பு மூலம் (வாக்களிக்கும் நேரத்தில் அந்த குழுவில் இருக்கும் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன்) ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.

அதிகாரம் 16
இணைத்தல்/கலைத்தல்

கட்சியை கலைப்பது அல்லது வேறு கட்சியுடன் இணைப்பது பற்றிய எந்த முடிவும், அதற்காக பிரத்தியேகமாக கூட்டப்படும் தேசிய செயற்குழு கூட்டத்தில், அதில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினர் முடிவுக்கு விடப்பட வேண்டும். ஆனால், கட்சியை கலைப்பது அல்லது வேறு கட்சியுடன் இணைப்பது போன்ற முடிவை தேசிய செயற்குழு முடிவெடுத்த தேதியில் இருந்து, இரண்டு மாதத்துக்குள், அதற்காக பிரத்தியேகமாக கூட்டப்படும் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மை ஆதரவோடு கட்சியை கலைக்கவோ, வேறு கட்சியுடன் இணைக்கவோ ஒப்புதல் பெற வேண்டும்.

(கடைசி திருத்தம் 18.12.2014)
(கடைசி திருத்த மாற்றம் 19.07.2016)

பிற்சேர்க்கை – 1

மைசூரில் 18.12.2014 அன்று நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கட்சியின் இரண்டடுக்கு உறுப்பினர்கள் முறைக்கு, கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தொண்டருக்கு உறுப்பினராகும் விசயத்துக்கு கீழ்கண்ட நடைமுறையும் நிபந்தனையும் வலியுறுத்தப்படுகிறது.

1. அவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு செயல்பட்டிருக்க வேண்டும்..
2. கடந்த ஒரு ஆண்டு நடந்த கூட்டங்களில் 50 சதவீதம் அவர் கலந்திருக்க (ஆஜர்) வேண்டும்.
3. கட்சியின் அடிப்படை பாடத் தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
4. அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வழிகாட்டுதலின்படி, கட்சி நடவடிக்கைகளில் திருப்திகரமான முறையில் பங்கேற்க வேண்டும்.
5. அவர்கள் மதுபானங்கள், போதைப் பொருட்கள் மற்றும் இதர சமூக தீமைகளை விலக்கியவர்களாக இருக்க வேண்டும்.
6. லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் இருந்து அவர்கள் விலகி இருத்தல் வேண்டும்.

கட்சிக்கு ஒரு உறுப்பினரை சேர்க்கும் போது கீழ்கண்ட நிபந்தனைகள் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

1. அவர்களுக்கு 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
2. அவர்கள், கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் லட்சியங்களை கடைபிடிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
3. அவர்கள் வேறு ஏதாவது கட்சியில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
4. அவர்கள், கட்சி தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டும். மேலும் கட்சியின் ஒழுக்க-கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
5. அவர்கள் அறநெறி அடிப்படை தன்மையை மதிக்க வேண்டும்.
6. விதிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் உறுப்பினர் தகுதியை புதுப்பிக்க வேண்டும்.

செயல்வீரர்கள் நிலைக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் முறை:

கிளை கமிட்டிக்கு விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டும். கிளைக் கமிட்டி தனது பரிந்துரையுடன் அவ்விண்ணப்பத்தை நேர் மேல்மட்ட கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். அந்த கமிட்டி மாவட்ட தலைவரின் முடிவுக்கு சமர்பிக்க வேண்டும்.

செயல்வீரர் நிலைக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள் மாவட்ட தலைவர், மாநில தலைவர், தேசிய தலைவர் ஆவர்.

விதிவிலக்குகள்:

பல்வேறு மட்டங்களில் உள்ள கமிட்டிகள் மற்றும் தலைமைப் பொறுப்புக்கு செயல்வீரர்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என்றாலும், சில பிரத்யேக தருணத்தில் விதிவிலக்காக செயல்வீரர் இல்லாத உறுப்பினரை, குறித்த பணிக்கான (adhoc) அடிப்படையில், அவர்களை கமிட்டியிலோ அல்லது தலைமை பொறுப்பிலோ அந்த மட்டத்தில் அதிகாரம் பெற்றோர் அனுமதிப்பர். ஆனால், அப்படிப்பட்டவர்கள், கமிட்டியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட ஆறு மாத காலத்துக்குள், கட்சியின் அடிப்படை தகுதி பாடத்தை முடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் செயல்வீரராக கருதப்படுவர். ஆனாலும் கூட ஒரு உறுப்பினர் செயல்வீரராக வேண்டுமானால் நிர்ணயிக்கப்பட்ட 3 முதல் 6 வரை வகுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

விதி விலக்கை கொடுக்க கூடிய அதிகாரம் பெற்றவர்கள் கீழ்கண்டவராவார்:

கிளை மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரை மாநில செயலகக் குழு
மாநில மட்டம் தேசிய செயலகக் குழு
தேசிய மட்டம் தேசிய செயற்குழு